ஞாயிறு, 21 ஜூலை, 2013

குடிஞ்சலும் அப்பாவும்....


தோட்டத்தில் உருளை கிழங்கு பயிரிட்டிருந்த சமயம், அப்போதெல்லாம் இரவு நேரங்களில் அப்பா காவலுக்கு செல்வது வழக்கம். காரணம் காட்டு பன்றிகள் தோட்டத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்து விட்டு போய்விடும். பன்றிகளை கொடிய விலங்கு என்று நான் நம்பிக்கொண்டிருந்த காலக் கட்டம் அது. அப்பா காவல் இருக்கும் இடத்திற்கு பெயர் "குடிஞ்சல்".
 
நான்கு குச்சிகளை கொண்டும் ஒரு தார்ப்பாயை கொண்டும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும். உள்ளே ஒரு மூலையில் எப்போதும் பாதி மண்ணெண்ணெய் குடித்த நிலையில் ஒரு விளக்கும், அப்பாவின் வாசனையை சொல்லும் ஒரு பாயும் இரண்டு கம்பளிகளும் ஒரு ஓரத்தில் சுருட்டி வைக்கப் பட்டிருக்கும். பள்ளி இல்லாத நாட்களில் பகல் நாட்களில் நானும் அக்காவும் அங்கு தான் தங்க வைக்கப் பட்டிருக்கிறோம்.
 
குடிஞ்சலுக்கு முன்னாள் எப்போதும் எரிந்து போன நிலையில் ஒரு மரக் கட்டையும், அவ்வபோது தேனீர் வைத்து குடிக்க மூன்று செங்கல் கற்களை கொண்ட அடுப்பும் சாம்பலை கக்கிய படி வாசலில் கிடக்கும். இரவு நேரங்களில் அப்பா இங்கே வந்து என்ன செய்வார் என்று எனக்கு நானே கேட்டு கொள்வேன், இரவு நேரங்களில் பன்றியை விரட்ட அப்பா போடும் சத்தம் பன்றிகளை தாண்டி வீட்டில் இருக்கும் எங்களுக்கும் கேட்கும். அப்பாவின் சத்தத்தை கேட்டு பயந்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன், அந்த நேரங்களில் எல்லாம் அம்மாவை எழுப்பி என்னை குடிஞ்சலுக்கு கூட்டி போக சொல்லி அழுதிருக்கிறேன், நான் ஜெபம் செய்ய பழகியது கூட அப்பாவுக்காகவும் அந்த குடிஞ்சலுக்காகவும் தான்.
 
எவ்வளவு அடம் பிடித்து அழுதாலும் இரவு நேரங்களில் குடிஞ்சலுக்கு அழைத்துக் கொண்டு போகவே மாட்டார். ஒரு நாள் பிடிவாதம் அதிகமாக "வந்து தொலை" என்று திட்டித் தான் அழைத்துப் போனார். நான் திருவிழாவிற்கு போவதை போலத் தான் அவரோடு போனேன். குடிஞ்சலை அடைந்ததும் முதலில் விளக்கு ஏற்றப்பட்டது. பாய் விரித்த அப்பா என்னை படுக்க சொல்லிவிட்டு, அங்கே கிடந்த மரக் கட்டையை எரியுட்டினார். ஹோ ஹோய் ஹோ ஹோய் எனக் கத்திக் கொண்டே இருந்தார். "ஏம்பா பண்ணி தான் வரலையே ஏன் சும்மா கத்திக்கிட்டே இருக்க"னு புரியாமல் கேட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. "டேய் இந்த சத்தம் பன்னிக்கு இல்ல, எலிக்கு என்றார். (காரணம் எலி உருளை கிழங்குகளை கடிச்சி கடிச்சி வச்சிட்டு போய்டும்.) எலியை பிறகு எங்கு பார்த்தாலும் அடிக்க பாய்வதற்கு இதுவும் ஒரு காரணம்.)
 
மொத்த சத்தங்களையும் இரவு வாங்கி வைத்துக் கொண்டு அமைதியாய் இருக்க, அப்பா மட்டும் காத்துக் கொண்டும் அவ்வபோது கத்திக் கொண்டும் இருந்தார். அப்பாவிடம் ஏதேதோ கேட்க முயன்று தோற்று போன நாட்களில் அந்த இரவும் ஒன்று. அந்த நேரம், எனக்கு அப்பாவை பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது, அப்பா என்ன பார்க்கும் போது பாவமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அப்பா கத்துவது போல நானும் கத்தி கொண்டிருந்தேன், அப்போது அப்பா என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
 
எப்போது அந்த தருணத்தை நினைத்தாலும் நான் மட்டும் அழுது கொண்டே இருப்பேன். காரணம் அதன் பிறகு இது வரை அவர் அந்த சிரிப்பை எனக்கு தந்ததில்லை. அப்பாவிடம் அதை நினைவு படுத்தும் போதெல்லாம் பொய்யாக ஒரு சிரிப்பாய் உதிர்ந்துவிட்டு போய்விடுவார். அந்த சிரிப்பை மீட்டு தர இப்போது அந்த குடிஞ்சலும் இல்லை, அந்த பன்றிகளும் இல்லை....

என் ஹீரோவுக்காக....

அதுக்கு பேரு டைரி.......


 எத்தனையோ டைரி நான் எழுதி இருந்தாலும் இது வரை அந்த டைரியை பற்றி எழுதியதே இல்லை. ஏதாவது எழுதி விட்டு தூங்கி விடலாம் என ஆரம்பித்த என் இரவுகள், எதையாவது எழுதிவிட்டுத் தான் தூங்க வேண்டும் என மாற்றி அமைக்கப்பட்டதற்கு காரணம் டைரி தான். என் கனவுகள் என் கண்ணீர், என் சந்தோசம், என் காதல், என் இரவுகள் எல்லாம் எப்படி பட்டதென்று என் டைரிகளுக்கு மட்டுமே தெரியும்.
 
  "எப்ப பார்த்தாலும் ஏதா...வது எழுதிகிட்டே இருக்கியேடா"னு கேட்க்கும் அம்மாவிற்கு தெரியும் நான் இரவு எத்தனை மணி வரை டைரி எழுதுவேன் என்று. நான் டைரியில் எப்படியெல்லாம் எழுதுவேன், எதையெல்லாம் எழுதுவேன் என்று என் அப்பாவிற்கு தெரியும். காரணம் எனக்கே தெரியாமல் என் டைரியை படித்த முதல் வாசகர் என் அப்பா தான். என்னிடம் இருக்கும் நல்ல பழக்கம் டைரி எழுதுவது தான் என்று சொந்தங்களிடம் சொல்லி பெருமைப்பட்டு கொள்வார்.
 
பத்தாவது பெயில் ஆனது, வீட்டை விட்டு ஓடினது, திரும்பி வந்தது, அப்பா அடிச்சது, திரும்ப படிச்சது, வேலைக்கு போனது, முதல் சம்பளம் வாங்கியது, சம்பளத்துல அம்மாவுக்கும், அக்காவுக்கும் சேலை வாங்கியது, அக்காவுக்கு கல்யாணம் ஆனது, அக்கா கல்யாணம் ஆகி போனாலும் இன்று வரை அந்த சேலையை பாதுகாத்து வச்சிருக்கது, அப்பா பைக் வாங்கி கொடுத்தது, முதல் விபத்து ஏற்ப்பட்டது, முதல் சாவை கண் முன்னாள் பார்த்தது, கடைசியா அழுதது, அக்கா குழந்தைய முதன் முதலில் தூக்கியது, பின்னொரு நாளில் அவளுக்கு மொட்டை போட்டது, சென்னை வந்தது, வேலை தேடினது, என் காசில் நான் பைக் வாங்கியது, அதுல அப்பாவ வச்சு ஓட்டிட்டு போனது, இன்னும் நிறைய இருக்கு என் டைரிகளில், என் மூளையின் இன்னொரு பதிப்பு தான் டைரி.
 
என் மொத்த டைரிகளையும் ஸ்கேன் செய்தால் மொத்தம் மூன்று காதல் கிடைக்கும். பப்பி லவ், குப்பி லவ், கடைசியா தொப்பி லவ். பப்பி லவ் எல்லாருக்கும் அமைந்தது போல தான் எனக்கும், சிறுவனில் இருந்து பையனாக நான் மாறிய போதே அதுவும் மாறி போய் விட்டது. குப்பி லவ் சயனைடுக்கு ஒப்பானது. உருகி உருகி, விழுந்து விழுந்து காதலித்ததால் ஏகப்பட்ட அடி வீட்டிலும், வாழ்க்கையிலும். என்னை விட அந்த சயனைடு காதலை என் டைரிகள் அழுது கொண்டே சொல்லும். கடைசியாக வந்தது தான் தொப்பி லவ், யார் தயாரித்தது, எங்கிருந்து வந்தது எல்லாம் எனக்கு தெரியாது, கொஞ்ச நாள் என் தலையில் இருந்தது, இப்போ யார் தலையில் இருக்கென்று அந்த தொப்பிக்கு மட்டும் தான் தெரியும். கொஞ்சம் என் டைரிகளுக்கும் தெரியும். என் டைரியை படித்தவர்களுக்கும் தெரியும். 
 
 
எப்போதாவது பழைய டைரியை எடுத்து படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை, கொஞ்சம் நியாபகம் எல்லாமே வரும், காரணம் அந்த டைரி தான். எப்பவுமே என் கைகளில் ஒரு டைரி இருக்கும், அதில் ஏகப் பட்ட கதா பாத்திரங்களும், கொஞ்சம் கதைகளும் இருக்கும். நான் எப்படி தூங்காமல் இருந்து பழகி விட்டேனோ அப்படி தான் டைரிகளும் என்னை தூங்க விடாமல் பழக்கி விட்டது. டைரிய பற்றி எழுதியது கூட அந்த டைரியில் தான் இருக்கு. அதுல உள்ள ஒரு பக்கம் தான் இங்க இருக்கு.......

இந்த பதிவு கூட அந்த பெண்ணிற்க்காகத் தான்.....


 நான்கு வருடங்களுக்கு முன்னாள் அவினாசி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் தெக்கலூர் பக்கத்தில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஒருவர் என்னை பார்த்துக் கொண்டே தான் செத்துப் போனார். அவருக்கு எப்படியும் ஒரு முப்பத்தைந்தில் இருந்து நாற்பது வயது இருக்கும்.அவர் யாரை நினைத்துக் கொண்டு இறந்து போனார் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அவர் யாரோ ஒருவரை இந்த உலகத்தில் தனிய...ாக விட்டு விட்டு போய்விட்டார் என்பது மட்டும் அவர் கண்களில் தெரிந்தது. அவர் உயிருக்காக போராடிய போது நான்கு ஐந்து பேர் தான் இருந்தோம். பிணமாக கிடந்த போது முப்பது பேருக்கும் மேலாக நின்று கொண்டிருந்தோம். அந்த வழியாக வாகனங்களில் வந்த சிலர் மட்டும் வாகனத்தை நிறுத்தி "என்ன ஆச்சு" என கேட்டு தெரிந்து கொண்டு கிளம்பிவிட்டார்கள். சிலர் "ஆள் அவுட்டா" என தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். ஒரு "மூன்றாவது" மனிதர் இறந்து போனவரின் செல் போனில் இருந்த நம்பர் எல்லாத்துக்கும் தகவலை தெரியபடுத்தி கொண்டிருந்தார். எல்லாருமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் தான். சிறிது நேரத்தில் போலிஸ் வந்தது, விபத்தைப் பற்றியும், அவர் இறந்து போனதை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்கள். எல்லா தகவல்களையும் வாங்கி கொண்டு " இங்க யாரும் நிக்காதிங்க, டேய் போங்கடா" என்று விரட்டினார்கள். ஆம்புலன்ஸ் வருவதற்கும், இறந்து போனவர் யாரையெல்லாம் விட்டு போனாரோ அவர்களில் இரண்டு மூன்று பேர் வருவதற்கும் சரியாக இருந்தது. இறந்து போனவர் யாரை தன்னந் தனியாக விட்டு விட்டு போயிருப்பார் என நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ, அவர் அந்த பெண்ணாகத் தான் இருக்க வேண்டும். இப்படியும் ஒரு அழுகை, கதறல் உலகத்தில் இருக்கிறது என நான் கண் கூடாக பார்த்த நாள் அது தான். இன்று வரை அப்படி ஒரு அழுகையை வேறெங்கும் நான் பார்த்தது இல்லை.அந்த பெண்ணிற்கு ஆறுதல் சொல்லக் கூடியவர் இறந்து போனவராகத் தான் இருக்க வேண்டும். என்னுடைய கண்களில் வந்து நின்றது அந்த பெண் அழுத அழுகை. இறந்த காலம், எதிர் காலம் என எதை பற்றியும் சிந்திக்காமல் நிகழ் காலத்தில் எந்த மனிதராலும் அப்படி ஒரு அழுகையை இந்த பூமிக்கு தந்து விட முடியாது. பல பேருடைய கண்ணீர், சோகம், கோபம், வேடிக்கை எல்லாவற்றையும் ஒரு சேர வாங்கி வைத்துக் கொண்டார்கள் அந்த பெண்ணும், இறந்து போன அந்த உடலும். வந்து நின்ற ஆம்புலன்ஸ் உடலை வாங்கி கொண்டும், மற்றவர்களை ஏற்றிக் கொண்டும் எங்கோ சென்று கொண்டிருந்தது. இப்போது என் கவலையெல்லாம் அந்த பெண்ணை நம்பி இருப்பவர்களை பற்றித் தான்......

இந்த பதிவு கூட அந்த பெண்ணிற்க்காகத் தான்.....

(எவ்வளவு வேகமா வேணும்னாலும் போங்க, ஆனா போகக் கூடாத இடத்துக்கு போய்டாதிங்க, அப்படிப்பட்ட பெண் எங்கள் வீட்டிலும் இருக்கலாம், உங்கள் குடும்பத்திலும் இருக்கலாம்.....)

தோண்டி எடுத்துட்டேன்.... (சுடுகாடு )


 கொல்லப்பட்டவர்கள், இறந்து போனவர்கள், செத்து போனவர்கள் என எத்தனையோ பலூன்கள் காற்று பிடுங்கப் பட்டு வெறும் ஆறடி குழிக்குள் புதைக்கப் பட்டிருந்தன, அந்த இடம் வெறும் சடலங்களை மட்டும் சுமந்துக் கொண்டு இருந்ததில்லை. அன்பு, பாசம், காதல், கோவம், அழுகை, அவமானம் என எத்தனை எத்தனையோ உணர்வுகளை, வெறும் மண்ணாக போர்த்திக் கொண்டு அமைதியாக படுத்திருந்தது.

நான் பார்த்திருக்கிறேன், அந்த இடம்  பாய்கள், தலையணைகள், உடைகள் என எது எதையோ வாங்கி வைத்துக் கொண்டு வெறும் மண்ணில் படுத்திருந்தது. அமைதியாய் இருக்கிற ஒரே காரணத்திற்க்காக பயப்படும் படி செய்கிற ஒரே இடம் இந்த இடம் தான். தாத்தாவின் சாவில் தான் அந்த இடம் எனக்கு அறிமுகமானது.

தாத்தாவின் உடலை புதைக்க வந்தவர்கள் எல்லோரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள், என் சொந்தங்கள் எல்லோரும் சோகமாய் இருந்தார்கள், சிலர் சோகமாய் இருப்பதாய் நடித்துக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அப்போது தான் அந்த இடம் எனக்கு அறிமுகமானது. அங்கு சின்ன சின்ன குன்றுகளாக பல உடல்கள் புதைக்கப் பட்டிருந்தன. பாதி எரிந்து போன பத்திகள், வாடிப்போன பூக்கள், என ஏதேதோ கிடந்தன.

பிறகு நான் மூன்று முறை புறங்கையால் தாத்தாவின் உடலுக்கு மண் தள்ளியது, அந்த மண்ணை அப்பா எடுத்து பேப்பரில் மடித்து வைத்தது, சித்தப்பா சுமந்து சென்ற பானைக்கு ஓட்டை போட்டது, பிறகு அந்த பானை உடைக்கப்பட்டதெல்லாம், "என்னடா பண்ணுறாங்க இவங்க" என்று யோசிக்கத்தான் முடிந்தது. ஏதேதோ செய்து ஒரு வழியாக புதைத்துவிட்டார்கள், பிறகு சாவுக்கும் மொய் என்று சொல்லி பணம் கூட வசூல் செய்தார்கள்.

அதன் பிறகு எத்தனையோ குழிகள், எத்தனையோ பானைகள், எத்தனை எத்தனையோ சவங்கள், வருடம் தவறாமல் தாத்தாவின் நினைவு நாளுக்கு அங்கெ போகும் போது தான் கவனிப்பேன், தாத்தாவிற்கு பிறகு எத்தனை குழிகள் வெட்டப்பட்டிருக்கிறது, எத்தனை குழிகள் தோண்டப்பட்டிருக்கிறது என்று. சுடுகாட்டில் பிணங்களை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

குழி வெட்டுபவர்களுக்கு சம்பளமாக ஆளுக்கு ஒரு கோட்டரும், ஒரு சாப்பாடு பொட்டலமும் கொடுப்பார்கள், குழி வெட்டுபவர்கள் சாதணமானவர்கள் அல்ல, "அங்க தான் அவர பொதச்சோம், இங்க தான் இவர பொதச்சோம்," அடுத்து அவர்கள் லிஸ்ட்டில் யார் யார் வர போகிறார்கள் என்பது வரை சரியாக கணித்து சொல்பவர்கள் அவர்கள் தான். " உனக்கும் இங்க தான், எனக்கும் இங்க தான்' என்று குழி வெட்டுபவர்கள் சொல்லும் போது, என் மரணத்தை பற்றி முதன் முதலில் அந்த இடத்தில் தான் யோசித்தேன். அங்கே புதைக்கப் பட்டவர்கள் இரவுகளில் எழுந்து நடமாடுவார்கள் என நான் நம்பிக் கொண்டிருந்தது எல்லாம் அவர்கள் சொன்ன கதையை கேட்டுத் தான்.

எல்லாருடைய வாழ்க்கையின் கடைசி பக்கங்களும் இந்த இடத்தை மையமாகக் கொண்டு தான் முடிக்கப் பட்டிருக்கும். முற்றும் என முடியும் பல கதைகளின் கடைசி பக்கங்கள் கூட சுடுகாடு பற்றியதாகவே இருக்கும். நான் யோசித்திருக்கிறேன், திடீரென இறந்து போனவர்கள் எல்லோரும் திரும்பி வந்து விட்டால், எத்தனை பேர் கொல்லப் படுவார்கள், எத்தனை பேர் கொலைகாரனாக மாற்றப்படுவார்கள், என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழும் என கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.

சுடுகாட்டில் கல்லறை கட்டுவதெல்லாம் யாரோ கற்றுக்கொடுத்தது தான். தாத்தாவின் கல்லறைக்கு வண்ணங்களில் பெயிண்ட் அடித்து அலங்கரிக்கிற வாய்ப்பு அப்பாவுக்கு கிடைத்த போது, நானும் என்னுடைய பங்காய் நான்கு செங்கலை சுமந்து சென்றிருக்கிறேன். நிம்மதியாய் போய் சேர்ந்தவர்கள் எல்லாரும் இங்கு தான் கடைசியாய் வந்து விடுகிறார்கள். நிம்மதி இல்லாதவர்களும் இங்கு தான் வருகிறார்கள் என்பது காலத்தின் கோலம்.

தாத்தாவின் சாவில் தொடங்கிய என் சுடுகாடு பயணம் கடைசியாய் விஷம் குடித்து இறந்து போன ராஜாவின் சாவு வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. சாவென்றால் பல முகங்கள் வந்து போகும், ஆனால் சுடுகாடு என்றால் முதன் முதலில் எங்க ஊரு சுடுகாடு தான் நினைவிற்கு வரும். என் சொந்தங்கள் போய் சேர்ந்த இடம், சொத்து வச்சிருந்தவங்க வந்து சேர்ந்த இடம், மொத்தத்தில் செத்து போனவர்களை கொண்டு வந்த இடம், நான் சுத்தி முத்தி பார்த்த இடத்தில் ஒரு இடம் தான் நாளை எனக்கானதும், இந்த உலகத்துக்கானதும்........
 

அதுவரை காத்து கொண்டிருக்கிறேன்....
 

தம்பிகளை பெற்ற அக்காக்களுக்காக .....


 சாயந்திரம் நாலு மணிக்கு அப்பா போன் பண்ணினார். "அக்காவுக்கு பிரசவ வலி வந்துருச்சு, ஹாஸ்பிடல சேத்துருக்கோம் டா" அதன் பிறகு ஆயிரம் போன் கால்கள் என்னிடமிருந்து அப்பாவுக்கு. பதினோரு மணிக்கு கொழந்த பொறந்துரும்னு டாக்டர் சொல்லிருக்காங்க என்றார்.

அக்காக்களைப் பெற்ற தம்பிகளுக்கு தெரியும், அக்கா அம்மாவிற்கு சமமானவள் என்று, அப்பா எதை வாங்கி வந்தாலும் கவரோடு கேட்டு அழுகிற ...எனக்கு, கவரை மட்டுமே தருகிற சராசரி அக்கா தான் அவள். ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிக்கும் வரம் எங்களுக்கு மட்டுமே கிடைத்தது அப்போது. (என்னை நாளு வயதிலேயே பள்ளிக்கு சேர்த்து விட்டார்கள்)

நான் எந்த தவறு செய்தாலும் வீட்டில் போட்டு கொடுத்து விடுவாள் தவறே செய்ய தெரியாதவள். அக்கா இருக்கிற காரணத்தால் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்காத சாதாரண தம்பிகளில் நானும் ஒருவன். அக்கா தான் துணிகளை துவைப்பாள். துவைக்கும் போது சட்டயிலோ பேண்டிலோ அக்காவுக்கு ஏதும் துப்பு கிடைத்து விட்டால் அவ்வளவு தான் வீட்டில் என்னை துவைத்து விடுவார்கள். துவைத்து தொங்க போட்ட நாட்களும் இருக்கிறது.

வீட்டை கூட்டிக் கொண்டே வருவாள், நான் குப்பைகளை போட்டு கொண்டே வருவேன், விளக்குமாறை வீடு கூட்ட அவள் பயன்படுத்திய நாட்களை விட, என்னை அடிக்க பயன்படுத்திய நாட்களே அதிகம். சண்டை சச்சரவுகள் அதிகம்.சத்தம் போட்ட சண்டைகளை விட ரத்தம் பார்த்த சண்டைகளும் அதில் அடக்கம்.

அக்காவின் கல்யாணம் அப்பாவிற்கு கனவு, எனக்கு கவலையாய் இருந்தது. கல்யாணம் ஆகி போனா அக்கா வீட்டிற்கு வரமாட்டாள் என நினைத்து, அம்மாக்கள் எப்படி அழுவார்களோ அப்படி தான் நானும் அழுதேன். என் முதல் சம்பளத்தில் எடுத்துக் கொடுத்த சேலையை இன்னும் தன் புகுந்த வீட்டில் பத்திரமாய் வைத்திருக்கும் அவள் அக்கா மட்டுமல்ல அம்மாவும் கூடத் தான்.

அக்காவிற்கு முதல் குழந்தை "காருண்யா" பிறப்பதற்கு முன் எப்படியான மன நிலையில் இருந்தேனோ அதே மன நிலை தான் இப்போதும். அக்காவை தாயான பிறகு பார்க்கிற தம்பிகளுக்கு தெரியும், அந்த சந்தோசம் எப்படி பட்டதென்று.

மணி பதினொன்ரை தாண்டி பல மணி நேரங்கள் ஆகி விட்டது. பல முறை அம்மாவை தொடர்பு கொண்டும் "இன்னும் பிறக்கலடா நீ தூங்கு காலைல போன் பண்றேன்" என்றே பதில் வந்து கொண்டிருந்தது. எப்போது அக்காவை நினைத்தாலும் ஒரு மெல்லிய சிரிப்பு தான் வரும், இப்போது, வலியா, சந்தோசமா, ஆவலா, என்னவென்றே சொல்ல முடியாத இரு துளி கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இப்படி இது வரை காத்துக் கொண்டிருந்ததில்லை, இப்படி ஒரு வலியில் போனையே பார்த்துக் கொண்டிருந்ததில்லை...

வீட்டில் கேட்கும் சத்தம்
வெளியில் இருக்கும் கோலம்
குடத்தில் இருக்கும் தண்ணீர்
துவைத்து காயும் சட்டை
உலையில் கொதிக்கும் சோறு
எல்லாமே அவள் தான்!
அவள் பக்கத்தில் நான்
இல்லையென்றாலும்
இந்த பதிவு கூட அக்காவிற்க்காகத் தான்.......

ஞாயித்துக் கிழமை.....


எப்போது நினைத்தாலும் மனதிற்கு "அப்பாடா" என்கிற ஒரு நிம்மதியை கொடுக்க கூடிய ஒரே நாள் இந்த நாள் தான். பள்ளிக்கு போகும் பருவத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் எனக்கு, காய்ச்சலோ, தலைவலியோ, வாந்தியோ வந்ததில்லை என்பதற்கு காரணம் அந்த நாளை நான் அந்த அளவிற்கு நேசித்தேன் என்பதே.

ஞாயிற்று கிழமைக்கு நான் மரியாதை கொடுக்க ஆரம்பித்ததெல்லாம் பள்ளி கூடத்துக்கு போக ஆரம்ப...ித்ததற்கு அப்புறம் தான். சனி, ஞாயிரு விடுமுறை தான் என்றாலும். ஞாயிற்றுக் கிழமைக்கு தான் எப்போதுமே மவுசு அதிகம். ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்கும் அப்படியொரு பந்தம் இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஸ்பெசல் கிளாஸ் வைத்து என் சாபங்களை வாங்கி கட்டிக் கொண்ட அந்த கணிதம் ஆசிரியை கமலாவை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

விடுமுறை தினம் என்பதை எல்லாம் தாண்டி, சர்ச்சுக்கு போறது, குடும்பத்தோடு படத்துக்கு போறது, வாரம் ஒரு பந்து வாங்குறது, சிக்கன், மீன் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, டிவியில படம் பாக்குறது, கிரிக்கெட் வெளாடுறது, சொந்தகாரவங்க வீட்டுக்கு போறது, சரக்கடிக்க பழகியது, ஆளப் பார்க்க போறது. இப்படி பல சந்தோசங்களை பத்திரமாய் வாங்கி வைத்திருப்பது இந்த ஞாயிற்றுக் கிழமை தான்.

எங்காவது போகணும் என பிளான் பண்ணினாலே நாங்கள் போக முடிவெடுப்பது ஞாயிற்றுக் கிழமையில் தான். எங்கயுமே போக கூடாது வீட்டிலேயே இருக்க வேண்டுமென முடிவெடுப்பதும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் தான். "டேய் எந்திரி டா, கோயிலுக்கு போகணும்" என்று சொல்லி என்னை வீட்டில் இருப்பவர்கள் டார்ச்சர் செய்ததும் இந்த ஞாயிற்றுக் கிழமையில் தான். கோவிலுக்கு போக மறுத்து போர்த்திக் கொண்டு படுத்திருக்கும் போதெல்லாம் "இவன் சாத்தான், அதான் உருப்புடாம சுத்திக்கிட்டு இருக்கான்" என்பார் அப்பா. ஒரு சில ஞாயிற்றுக் கிழமைகளில் கடவுளை வெறுக்க வைத்த புண்ணியமும் இந்த நாளையே சேரும்.

வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வந்த பிறகு எந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையும், எனக்கு ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததே இல்லை, பெரும் பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் என்னை கஷ்டப் படுத்தியது கறி சோறு தான்.

இறந்த காலத்தில் இருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளை நினைத்து இருக்கிற ஞாயிற்றுக் கிழமைகளை சபித்துக் கொண்ட நாளும் இருக்கிறது. என்ன இன்னக்கி ஞாயிற்றுக் கிழமை மாதிரியே இல்லையே என நினைக்கும் போது, சட்டென நினைவுக்கு வந்து விடும் வீட்டில் இருக்கிற போது வந்து போன ஞாயிற்றுக் கிழமைகள். வீட்டை விட்டு வெளியூரில் இருக்கிற நண்பர்களுக்கு தெரியும் ஞாயிற்றுக் கிழமை எதெல்லாம் நம்மிடம் இருந்து பறித்திருக்கிறது என்று.....

இஷ்டம் போல் வாழ்ந்த காலங்கள் எல்லாமே இந்த நாளில் தான் இருக்கிறது. வாரத்தின் முதல் நாளாகவும் இருக்கிறது. காலையில் எழுந்ததும் அப்பா போன் பண்ணுவார், "கோயிலுக்கு போகலயாட"னு, எனக்கும் அப்பாவிற்கும் சேர்த்தே வந்து போன ஞாயிற்றுக் கிழமைகள் இப்போதெல்லாம் அவருக்கு மட்டுமே வந்து போகின்றன......

திங்கள், 17 செப்டம்பர், 2012

எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்

காதலை நினைத்துக் கொண்டிருப்பதை விட மோசமானது அதை நினைததுக் கொண்டு தூங்க முயற்சிப்பது...... 

எல்லோர் மனதிலும் தொலைந்து போன ஒரு காதலோ,சூழ்நிலையால் பிரிந்து போன காதலோ,ஏமாந்து போன ஒரு காதலோ,ஒருதலையாய் காதலித்த காதலோ,சொல்லாமல் விட்ட காதலோ,மறந்து போன ஒரு காதலோ இருக்கிறது என்பது சாதாரண விஷயமா.அதை காதல் என்று சொல்பவர்களை விட கதை என்று சொல்பவர்கள் தான் அதிகம்,எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்,இ
ப்போது நினைத்தாலும் கண்ணீர் கொடுக்கிற காதல் அப்போது எப்படியானதாக இருந்திருக்கும்.எல்லாவற்றையும் மறந்து நம் காதலனையோ,காதலியையோ நினைத்திருந்த நிமிடங்களை நினைக்கும் போது அழாமல் இருக்க முடிகிறதா நம்மால்,பிரிந்து போவது சகஜம்,மறந்து போவது சகஜமா?எல்லாவற்றையும் துறந்து தனக்கு பிடித்தவருடன் வாழ,வீட்டை விட்டு வெளியேறுகிற காதல் சாதாரணமானது என நம்மால் எடுத்துக் கொள்ள முடியுமா?
இன்னும் தன் பழைய காதலை நினைத்து திருமணம் செய்யாமல் இருக்கும் ரமேஷ் அண்ணாவின் காதலை எந்த வகையில் சேர்ப்பது,விரும்பியவள் இல்லை என முடிவானதும் மருந்து குடித்து இறந்து போன நரேஷின் காதலை எப்படி சொல்வது,இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் இல்லை என்றதும் விஷம்குடித்து இறந்து போன ஜெகன்,உமாவின் காதல் அவர்களின் குடும்பத்திற்கு எதை கொடுத்திருக்கும்.அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி அழுத நான்சியின் காதலும் அவளும் எவ்வளவு காயப்பட்டிருப்பார்கள்,ஐந்து வருடமாய் காதலித்தேன்,இப்போது இல்லை என்று சொல்லும் உங்கள் நண்பரின் காதல் அவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி இருக்கும்,எப்போதோ விட்டு போன என் ஏஞ்சல் பற்றிய காதல் எத்தகைய இழப்புகளை என்னுள் ஏற்படுத்தி இருக்கும்,காதலிக்கிறவளிடம் காதலை சொல்லாமல் பயந்து கொண்டே இருக்கும் அரவிந்தனின் காதல் எப்படியான ஒரு ஆசையை அவன் மனதில் விதைத்திருக்கும்,சொல்லிய காதல் ஏற்றுக்கொள்ளப்படாத போது முத்துவின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படியாய் இருக்கும்,பேஸ் புக்கில் நான் காதலிக்கலாம வேண்டாமா என பதிவிடும் ஒருவனின் மனநிலை எப்படில்லாம் அலைபாயும்,அதற்க்கு பதிலிடும் ஒருவரின் பதில் எப்படியெல்லாம் இருக்கும்,கணவனிடம் சண்டையிடும் போது வந்து போகிற காதலனின் நினைவு அப்போது அவளுக்கு சந்தோசத்தையா தந்துவிட்டு போய் இருக்கும்,பிரிந்து போன ஒரு காதலர்கள் எங்காவது ஓரிடத்தில் சந்தித்துக் கொள்கிற நொடி எப்படியான ஒரு சந்தோசத்தை பறித்திருக்கும் இருவரிடமிருந்தும்.தன்னுடைய காதலை மனதிற்குள் வைத்து வெளியே சிரிக்கிற ஒருவனின் இதயம் இதயமாகவா இருக்கும்.அவன் அழுது வெடிக்கிற நொடியை நம்மால் அனுபவிக்க முடியுமா?காதல் என்ற ஒரு வார்த்தைக்காக எல்லாவற்றையும் இழந்தவரின் வாழ்க்கை அதற்கு மேல் இனிமையாகவா இருக்க போகிறது.காதல் இல்லை என முடிவான அந்த ஒரு இடத்திலேயே இன்னும் இருப்பவர்கள் எத்தனை பேர்.உறங்கும் ஒரு நொடிக்கு முன்பாக விழியோரம் வழியும் ஒரு துழி கண்ணீர் எப்படியான ஒரு காதலை நினைத்து பார்த்திருக்கும்.நிராகரிக்கப் பட்ட ஒரு காதல் இப்போது எங்கெல்லாம் விழித்துக்கொண்டிருக்கும்,இல்லாமல் போன காதலை நினைத்து தூங்க முயற்ச்சிக்கிற கண்கள் எதையெல்லாம் தேடி அழு(த்)துப் போயிருக்கும்.ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடல் எத்தனை ஆண்களுக்கு இரவு நேர தாலாட்டாய் இருந்திருக்கும்,ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாடல் எத்தனை பெண்களுக்கு நல்ல உறக்கத்தை தந்திருக்கும்.காதல் சாதாரணமானது தான்,அது ஏற்படுத்துகிற தாக்கம் சாதரணமானதா.....
காதலின் தாக்குதலில் இருந்து தப்பி வந்து இதை எழுதுகிற என் காதல் இன்னும் அப்படியே இருப்பதை இனி எந்த பதிப்பில் சொல்ல.......

என்னைப் பற்றி

எனது படம்
நான் இணையதளத்தில் போராளி ஆக வேண்டும் என்ற ஆசையில் உருவானது இந்த மின் பக்கம். எதையோ சொல்ல வந்து எது எதையோ சொல்லுவேன், ஆமா இது தான் என் வேலை. உங்களுக்கு பிடிக்காதது மட்டும் தான் இங்க இருக்கும். புதிதாக இருக்கிறதே என்று எதையும் ஆவலாக தேடாதீர்கள். ஏமாற்றங்களுக்கு இந்த தளமோ பதிவரோ பொறுப்பல்ல.... (குறிப்பு) சட்டதிட்டத்திற்கு புறம்பானது.