திங்கள், 17 செப்டம்பர், 2012

எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்

காதலை நினைத்துக் கொண்டிருப்பதை விட மோசமானது அதை நினைததுக் கொண்டு தூங்க முயற்சிப்பது...... 

எல்லோர் மனதிலும் தொலைந்து போன ஒரு காதலோ,சூழ்நிலையால் பிரிந்து போன காதலோ,ஏமாந்து போன ஒரு காதலோ,ஒருதலையாய் காதலித்த காதலோ,சொல்லாமல் விட்ட காதலோ,மறந்து போன ஒரு காதலோ இருக்கிறது என்பது சாதாரண விஷயமா.அதை காதல் என்று சொல்பவர்களை விட கதை என்று சொல்பவர்கள் தான் அதிகம்,எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்,இ
ப்போது நினைத்தாலும் கண்ணீர் கொடுக்கிற காதல் அப்போது எப்படியானதாக இருந்திருக்கும்.எல்லாவற்றையும் மறந்து நம் காதலனையோ,காதலியையோ நினைத்திருந்த நிமிடங்களை நினைக்கும் போது அழாமல் இருக்க முடிகிறதா நம்மால்,பிரிந்து போவது சகஜம்,மறந்து போவது சகஜமா?எல்லாவற்றையும் துறந்து தனக்கு பிடித்தவருடன் வாழ,வீட்டை விட்டு வெளியேறுகிற காதல் சாதாரணமானது என நம்மால் எடுத்துக் கொள்ள முடியுமா?
இன்னும் தன் பழைய காதலை நினைத்து திருமணம் செய்யாமல் இருக்கும் ரமேஷ் அண்ணாவின் காதலை எந்த வகையில் சேர்ப்பது,விரும்பியவள் இல்லை என முடிவானதும் மருந்து குடித்து இறந்து போன நரேஷின் காதலை எப்படி சொல்வது,இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் இல்லை என்றதும் விஷம்குடித்து இறந்து போன ஜெகன்,உமாவின் காதல் அவர்களின் குடும்பத்திற்கு எதை கொடுத்திருக்கும்.அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி அழுத நான்சியின் காதலும் அவளும் எவ்வளவு காயப்பட்டிருப்பார்கள்,ஐந்து வருடமாய் காதலித்தேன்,இப்போது இல்லை என்று சொல்லும் உங்கள் நண்பரின் காதல் அவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி இருக்கும்,எப்போதோ விட்டு போன என் ஏஞ்சல் பற்றிய காதல் எத்தகைய இழப்புகளை என்னுள் ஏற்படுத்தி இருக்கும்,காதலிக்கிறவளிடம் காதலை சொல்லாமல் பயந்து கொண்டே இருக்கும் அரவிந்தனின் காதல் எப்படியான ஒரு ஆசையை அவன் மனதில் விதைத்திருக்கும்,சொல்லிய காதல் ஏற்றுக்கொள்ளப்படாத போது முத்துவின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படியாய் இருக்கும்,பேஸ் புக்கில் நான் காதலிக்கலாம வேண்டாமா என பதிவிடும் ஒருவனின் மனநிலை எப்படில்லாம் அலைபாயும்,அதற்க்கு பதிலிடும் ஒருவரின் பதில் எப்படியெல்லாம் இருக்கும்,கணவனிடம் சண்டையிடும் போது வந்து போகிற காதலனின் நினைவு அப்போது அவளுக்கு சந்தோசத்தையா தந்துவிட்டு போய் இருக்கும்,பிரிந்து போன ஒரு காதலர்கள் எங்காவது ஓரிடத்தில் சந்தித்துக் கொள்கிற நொடி எப்படியான ஒரு சந்தோசத்தை பறித்திருக்கும் இருவரிடமிருந்தும்.தன்னுடைய காதலை மனதிற்குள் வைத்து வெளியே சிரிக்கிற ஒருவனின் இதயம் இதயமாகவா இருக்கும்.அவன் அழுது வெடிக்கிற நொடியை நம்மால் அனுபவிக்க முடியுமா?காதல் என்ற ஒரு வார்த்தைக்காக எல்லாவற்றையும் இழந்தவரின் வாழ்க்கை அதற்கு மேல் இனிமையாகவா இருக்க போகிறது.காதல் இல்லை என முடிவான அந்த ஒரு இடத்திலேயே இன்னும் இருப்பவர்கள் எத்தனை பேர்.உறங்கும் ஒரு நொடிக்கு முன்பாக விழியோரம் வழியும் ஒரு துழி கண்ணீர் எப்படியான ஒரு காதலை நினைத்து பார்த்திருக்கும்.நிராகரிக்கப் பட்ட ஒரு காதல் இப்போது எங்கெல்லாம் விழித்துக்கொண்டிருக்கும்,இல்லாமல் போன காதலை நினைத்து தூங்க முயற்ச்சிக்கிற கண்கள் எதையெல்லாம் தேடி அழு(த்)துப் போயிருக்கும்.ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடல் எத்தனை ஆண்களுக்கு இரவு நேர தாலாட்டாய் இருந்திருக்கும்,ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாடல் எத்தனை பெண்களுக்கு நல்ல உறக்கத்தை தந்திருக்கும்.காதல் சாதாரணமானது தான்,அது ஏற்படுத்துகிற தாக்கம் சாதரணமானதா.....
காதலின் தாக்குதலில் இருந்து தப்பி வந்து இதை எழுதுகிற என் காதல் இன்னும் அப்படியே இருப்பதை இனி எந்த பதிப்பில் சொல்ல.......

திங்கள், 3 செப்டம்பர், 2012

மகாபலிபுரமும் ஆறு நாட்களும்.....

                             இதற்கு முன்னாள் எங்களில் பாதி பேர் மகாபலிபுரம் சென்றதில்லை. சிற்பக் கலை கூடம் என்பது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். ராயர் கோபுரம்,வெண்ணெய்கட்டி உருண்டை,அர்ஜுனா பேலஸ்,இப்படி புருவம் உயர்த்திய இடங்கள் அதிகம். இந்த ஆச்சிரியங்களை தாண்டி எங்களை பெரிதும் பாதித்த  மகாபலிபுரத்தை நம்பி இருக்கும் சிற்பக் கலைஜர்கள்,அவர்களின் குடும்பம், ஜோசியக்காரர்கள், குறிசொல்பவர்கள்,மீனவர்கள்,பாசி விற்கும் மராட்டிய பெண்கள்,முகத்தை மூடியப்படி வலம் வரும் காதலர்கள்,ஐஸ் க்ரீம் பெட்டியை தள்ளிக்கொண்டு வரும் வியாபாரிகள்,ஒரு நொடி புகைப்படம் எடுத்து தரும் புகைப்பட நிபுணர்கள்,இங்கு படம் பிடிக்க கூடாது என சொல்லி விரட்டி விடும் ஆதிக்கவாதிகள்,இவர்களை தவிர்த்து எங்களால் மகாபலிபுரத்தை பார்க்க முடியவில்லை.
                                                                                                                                                                                                 
ஆறு  நாட்கள் பயிற்சி என தொடங்கிய எங்கள் இருபது பேருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள்.புதியதலைமுறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அந்த நொடி இன்னும் நினைவில் இருக்கிறது.நாங்கள் மொத்தம் இருபது பேர்.வேறு வேறு பாதையில் இருந்து வந்த எல்லோரும் இப்போது ஒரு பாதையில் செல்கிறோம் என்பது சின்ன விஷயமல்ல.....

முதலில் எங்கள் இருபது பேரை பற்றி....

நாங்கள் மிகப் பெரிய அனுபவசாலிகள் இல்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையை கொண்டவர்கள் என்பது மட்டுமே எங்களின் தகுதி..எங்களை தேர்ந்தெடுத்த விக்ரம் சாருக்கு மட்டுமே இது தெரியும்.காமரா,கனவுமாக வரும் வினோத் பற்றி அவரது புகைப்படங்களே சொல்லும்,ஏதோ பள்ளி கூட ஆசிரியர் போல வரும் பிரேமா அக்காவை அவ்வளவு எளிதில் எடை போட்டு விட முடியாது.அவரின் முக பாவனைகள் நவரசங்களையும் தாண்டி நிற்கும் என்பது என் தனி பட்ட கருத்து.பாரதியை அவரின் பெயரை கொண்டே அடையாளம் கண்டுகொள்ளலாம்.எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்பதே தலைவரின் குறிக்கோள்.ஒருவித புரிதலோடு அவரை அணுகினால் நாளை நீங்களும் அனுபவசாலியாகலாம்.எதற்க்கெடுத்தாலும் சிரித்தே மழுப்பும் திறமை எல்லோருக்கும் வாய்க்காது,அப்படியொரு திறமை கொண்டவர் தான் இனியன்.இவரிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.கேரளாவில் இருந்து வந்து தமிழில் சக்கை போடு போடும் சுந்தரை என்னால் மறக்க முடியாது.எந்த விஷயமானாலும் என்னிடம் கேட்கும் அவனை நான் தவறவிட்டால் நான் உண்மையில் துரதிஷ்டசாலிதான். எந்நேரமும் எதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் இசை பிரகாஷ் எங்களுக்கு ஆச்சிரியமாய் தெரிவான்.மழையில் நனைவது என்றால் இசைக்கு அவ்வளவு பிரியம்..லாவண்யா நம் எல்லோர் வீட்டு பக்கத்திலும் இருக்கும் பக்கத்து வீட்டு பெண்,கோபமும் இருக்காது,சோகமும் இருக்காது,ஆனால் அன்பு இருக்கும்.மச்சி உன்னால மட்டும் தான் முடியும் வேற யாராலையும் முடியாது இப்படியான வார்த்தைகள் இனி எங்கேனும் கேட்க முடிந்தால் எனக்கு ஜெய் சந்திரன் தான் நினைவுக்கு வருவான்.என்னை போல ஒருவன் தான் மது,பேருந்தை எதிர்ப் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பயணியைப் போல முகத்தை எப்போதும் வைத்திருப்பது அவனுக்கு கூடுதல் பலம். நல்லா வருவான் என்பது அவனின் நடவடிக்கையில் தெரியும்.இத இப்டி எடுக்கணும்,அத அப்டி படம் புடிக்கணும் என்ற சரவணனின்  அக்கறையே சொல்லும் பின்நாளில் நல்ல இயக்குனராக வருவான் என்று,எல்லோருக்கும் பாடல் போடுகிற,சந்தர்ப்பம் கிடைத்தால் ஆடுகிற அரவிந்தை யாராலும் யூகிக்க முடியாது,திடீரென வந்து நீ எழுதுனத படிச்சு காமிடானு சொல்வதிலாகட்டும்,படிச்சதுக்கு அப்புறமா கைதட்டி பாராட்டுறது ஆகட்டும் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விசிறி அவன்.இப்போதெல்லாம் எது எழுதினாலும் அவனிடம் காட்ட வேண்டும் போலவே இருப்பதை எப்படி அவனிடம் சொல்வது.பத்தாம் வகுப்பு மாணவியான ராஜியின் அடையாளமே அந்த சுறுசுறுப்பும்,கணீர் குரலும் தான்,ஒரு சிறிய எறும்பு ராஜியை கடந்து போவதை ஏதோ ஒரு யானை கடந்து போவதாய் சொல்லும் அந்த நேர்த்தியை பற்றி சொல்லியாக வேண்டும்.குழந்தை மொழி பேசும் அஸ்வினியை யாரும் விட்டு கொடுக்க மாட்டார்கள்,அவ்வளவு வெள்ளந்தி பெண்ணாக தான் வளைய வருவாள்.எப்போதும் குடும்ப நினைவுகளுடன் வரும் ஹரிணி அக்கா எல்லோருக்கும் ஒரு பாடமாக இருந்தாங்க,சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்தும்,வேலை நேரத்தில் வேலையுமாக இருந்தது அக்கா ஒருவராகத்தான் இருக்கும்.எதுவும் தெரியாததைப் போல இருக்கும் தேவி சாதாரண பெண் இல்லை,சசி சாரிடம் பாராட்டு வாங்கிய ஒரே பெண் அவங்களாகத்தான் இருக்கும்.கலாய்ப்பதில் பட்டம் பெற்ற ஒரே நபர் முரளியாகத்தான் இருக்கும், அப்படி ஒரு நேர்த்தியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எல்லோரையும் கலாய்ப்பான்.அவன் கூட இருந்தா நேரம் போறதே தெரியாது.லெனின் அக்காவுடன் ஐந்து நாட்கள்னு ஒரு புத்தகமே எழுதலாம்,ஆனா எல்லா பக்கமும் காலியாகத்தான் இருக்கும்,எப்போதும் அமைதியாவே இருப்பாங்க,ஜோக்னு சொன்னா மட்டும் தான் சிரிப்பாங்க,ஆனா அவங்களோட பொறுப்பு என்னவென்று எங்க எல்லோருக்கும் தெரியும்,அளவாக பேசி,அளவாக நடக்கும் ப்ரியாவ எப்போதும் ஒரு புன்னகையோட பார்க்கலாம்,அவ்வளவு அமைதி. எப்போதுமே ஒரு பரபரப்புடனும்,ஒரு எதிர்பார்ப்புடனும் இருக்கும் பிரச்சன்னா ஆணாக பிறக்கவேண்டியவள்,அப்படி ஒரு தைரியம்.புத்திசாலி பெண்.வந்த அனைவருக்கும் பிடித்து போன ஒரு சிரிப்பு பொம்மையாய் நான் இருந்திருக்கிறேன் என்பது என்னை பொறுத்தவரை சந்தோசமான விஷயம் தான்.ஆனால் மற்றவர்களின் பார்வை எப்படி என அவர்கள் தான் சொல்ல வேண்டும்.இவர்களுடனான அந்து ஆறு நாட்கள் எப்படி இருந்தது என்பதை என் மூளையின் E பதிப்பில் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது.

நிகழ்வு 
                இதற்க்கு முன்னதாக நாங்கள் கலந்து கொண்ட பயிற்சி பட்டறைகளில் இது முற்றிலும் வேறுபட்டது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.கேமரா பற்றி தெரிந்திருந்த எங்களுக்கு கேமரா என்றால் என்னவென்று அந்த ஆறு நாட்களில் தான் தெரிந்து கொண்டோம்.கேமரா பற்றிய அறிவே இதற்க்கு முன் இல்லாமல் அதை எப்படி எல்லாம் பயன்படுத்தினோம் என்பதை நினைக்கும் போது சிரிப்பிற்கு பதிலாக வேதனையே இருந்தது.எங்களுக்கு வகுப்பு எடுத்த சசி சாரை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.அவ்வளவு பெரிய மனிதர்,எங்களுக்கு கேமரா பற்றி எதுவும் தெரியாது என தெரிந்ததும் என்னவெல்லாம் நினைத்திருப்பாரோ.எதையும் வெளிக்காட்டாமல் அவர் சொல்லி கொடுத்த விதம் வித்தியாசமானது.எல்லோருடைய கேமரா பதிவுகளிலும் தவறுகள் இருந்தது எங்களுக்கு தெரியும்,ஆனால் அதை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டி அவர் மேற்கொண்ட உத்திகள் சாதாரணமானது அல்ல.குறிப்பாக அவரின் கோபங்களை அவர் கட்டு படுத்தி இருந்தது அவர் முகத்தில் தெரிந்தது.என்றாவது எங்களில் ஒருவரை நினைத்து அவர் பெருமை கொள்வார் என்பது மட்டும் ஆணித்தரமான உண்மை. ஆசான் என்ற வார்த்தையை தவிர அவரைப் பற்றி சொல்ல எங்களுக்கு வேறு வார்த்தை இல்லை.எங்களுடன் சேர்ந்து வந்த அவந்தி மேடத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள்.தமிழ் மொழியில் அவர்கள் பேசுவதை கேட்க ஆச்சரியமாய் இருக்கும்.எங்களோடு வந்து தொழிநுட்பங்களை கற்று கொடுத்த அவர்களை நாங்கள் என்றாவது நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் என்பது மட்டும் உண்மை.பாலா அண்ணா எங்களுக்கு சொல்லிய அறிவுரைகள் ஒவ்வொன்றும் உண்மையாய் இருந்தது.எங்களின் வளர்ச்சிக்கு இவர்கள் மூன்று பேரின் பயிற்சி கை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நான்காவது நாளில் வந்த விக்ரம் சார் ஐந்து நொடியில் எங்கள் இருபது பேரின் மன நிலையையும் தெரிந்து கொண்டு போனது சாதாரண நிகழ்வு இல்லை. அடிக்கடி வந்து போகும் பிரபு சார் இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு என்று கேட்டு அவரின் அக்கறையை காட்டிவிட்டு போவார்.அதே போல ப்ரீத்தி மேடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் எங்களை கட்டி மேய்க்க அவர்கள் பட்ட பாடை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் எங்களின் எல்லா செயல்களையும் பொறுத்துக் கொண்ட அவர்களின் மீது ஒரு மரியாதை இருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.அங்கிருந்த எல்லா நாட்களிலும் எங்களுக்கு உணவு பரிமாறிய அந்த மூன்று பேரையும் மறக்க முடியாது,குறிப்பாக அந்த நேபாளி நிக்கியை சொல்லியாக வேண்டும்.ஆறு நாட்களும் எங்களோடு இருந்த வாகன ஓட்டுனர் சாம் அண்ணாவிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வாய்ப்பை வழங்கிய புதியதலைமுறை நிறுவனத்தை எந்த நிலையில் இருந்தாலும் மறக்கமுடியாது என்பதை நாங்கள் இருபது பெரும் உணர்ந்திருக்கிறோம்.ஆறு நாட்கள் மகாபலிபுரத்தில் நடந்தது எல்லாம் சின்ன சின்ன  விஷயங்கள் தான்,ஆனால் அந்த அனுபவங்கள் சின்ன விஷயமல்ல....

ஜவ்வாது மலையும் மூன்று நாளும்.....

ஒருப் பயணம் நமக்கு எதெல்லாம் கற்றுக் கொடுக்கிறது.எதிர்பாராத எதிர்பார்ப்புடன் தொடங்குகின்ற பயணம் எப்படியான அனுபவங்களை நமக்குள் பதிந்துவிடுகிறது.ஒரு நொடியில் நம்மை ஊமையாக்கிவிடும் சாலையோர கண்ணீராகட்டும்,பறந்து போகிற சொகுசு காரில் மிதந்து    வரும் சந்தோசமாகட்டும்,பஞ்சரான காரின் பின் இருக்கை  குழந்தையின் புன்னகயாகட்டும் எல்லாமே ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துவிட்டு தான் கடந்து போகின்றன.அப்படியொரு அனுபவத்தை எங்களுக்குள் புதைத்து விட்டுப் போன பயணம் பற்றிய பதிவு தான் இந்த பக்கம்.......
                           
 எதையோ தேடித் போன பயணத்தில் எது எதையோ கண்டுபிடிக்க முடிந்தது.மலைவாழ் மக்கள் தொலைத்தவற்றை கண்டறிய முடிந்ததே தவிர எதையும் மீட்க முடியவில்லை.நகரத்தார் மாறிவிட்டார்கள் என்பதும் அவர்கள் கிராம மக்களை மாற்றி விட எவ்வளவு தூபம் போடுகிறார்கள் என்பதும் எங்களுக்கு தெளிவாக புரிந்தது." என்ன இல்லை இங்கு" என்ற தோணியில் தேடிய எங்கள்  பயணத்தில் "எதிர்பார்த்தது இல்லை அங்கு" என்பது தெளிவாக புரிந்தது.பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள்,ஆசிரியர் இல்லாத பள்ளிகூடங்கள்,கனவுகள் இல்லாத அவர்களின் இரவுகள்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணின் வேலி  தாண்டும் பரிதாபம்,கீறிப் பிள்ளையை உணவாகத் தர வந்த உபசரிப்பு,வழிகாட்டிய பிள்ளைகள்,எங்களை தீர்க்கதரிசியாகப் பார்த்த தலைவர்கள்,கிராம் கணக்கே எடை கொண்ட குழந்தைகள்,மனவளர்ச்சி இல்லாத ஹேமலதா,ஜிம்னாஸ்டிக் பாரதி,,பட்டாம் பூச்சியோடு விளையாடிய சந்தியா,பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியாத வினோத்,தேவிக்கு நாற்று நடக் கற்றுகொடுத்த வெண்மணி அக்கா,லாவண்யாவுக்கு நண்பனாய் மாறிப் போன சிவா,சுந்தரிடம் மல்லு கட்டிய குடிகார வெள்ளந்தி மனிதர்,பேனா கொடுத்த தாத்தா,எனக்கு முடி வெட்டி விட்ட சங்கர் அண்ணா,எங்கள்  மூவரையும் யோசிக்க வைத்த மணிமேகலை பாப்பா,உங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை என சொல்லிய சரிதா அக்கா........
                 எத்தனை எத்தனை மனிதர்கள்,எப்படி எப்படியான வாழ்க்கை, எவ்வளவு கஷ்டங்கள்,அங்கு உணர்ந்த விஷயங்களை என் மூளையின் இணையதள பதிப்பில் பதிவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல,அழ வைத்த நிமிடங்களாகட்டும்,சிரித்துவந்த நொடிகளாகட்டும்,யோசிக்க வைத்த கணங்களாகட்டும் எல்லாமே சின்ன சின்ன  விஷயங்கள் தான் ஆனால் அந்த மனிதர்கள் சின்ன விஷயம் அல்ல!!!  அவர்கள் உயரத்தில் இருக்கிறார்களே தவிர இன்னும் வளரவில்லை என்பது எவ்வளவு வருத்தமாய் இருக்கிறதோ,அவ்வளவு சந்தோசமாய் இருக்கிறது அவர்கள் இன்னும் மாறாமல் இருப்பது.நாங்கள் கண்டு வந்த மிகப் பெரிய உண்மை "அவர்கள் யாருமே முகமூடி அணியவில்லை" என்பது தான், எல்லோருமே மூடி இல்லாத முகங்களாகவே இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.மிருகங்கள் அங்கு சென்று குடியேறாத வரை......






என்னைப் பற்றி

எனது படம்
நான் இணையதளத்தில் போராளி ஆக வேண்டும் என்ற ஆசையில் உருவானது இந்த மின் பக்கம். எதையோ சொல்ல வந்து எது எதையோ சொல்லுவேன், ஆமா இது தான் என் வேலை. உங்களுக்கு பிடிக்காதது மட்டும் தான் இங்க இருக்கும். புதிதாக இருக்கிறதே என்று எதையும் ஆவலாக தேடாதீர்கள். ஏமாற்றங்களுக்கு இந்த தளமோ பதிவரோ பொறுப்பல்ல.... (குறிப்பு) சட்டதிட்டத்திற்கு புறம்பானது.