வியாழன், 8 மார்ச், 2012

தேடல் இருக்கிறது இந்தப் பயணத்தில்.......

ஏதோ ஒரு கனவோடு சென்னைக்கு ரயிலேரும் ஒருவனின் பயணம் அவ்வளவு இனிமையானது அல்ல,லட்சியப் பயணம் தொடங்குவதே முன்ப்பதிவில்லாத ரெயிலின் கடைசிப் பெட்டியில் தான்.அவன் சென்னைக் கிளம்ப காரணமான ஏதாவது ஒரு கட்டுரையோ,யாரோ ஒரு சாதனையாளரின் வெற்றிக் கட்டுரையோ  அந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கும். எத்தகைய கனவுகளோடு சென்னை வந்து இறங்கினாலும், சென்னை வாசிகளின் ஒரு சின்ன ஏளனப் பார்வையில் கனவுகள் சட்டென்றுப் பட்டுப் போகும். ஆயிரம் தமிழ் சொந்தங்கள் இருந்தும் அனாதயாய்ப்போன ஒரு எண்ணம் சட்டென வந்து போவதை அவன்  உணர்ந்திருப்பான்.அவனின் செயலே அவனை அன்னியன் என்பதை காட்டிக் கொடுத்துவிடும்.அவன் வான ஊர்தியை  அண்ணாந்து பார்க்கும் போதே மெத்தப் படித்த மேதாவிகள் இவன் பட்டிக்காட்டான் என்பார்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம்.சென்னை வந்ததை ஏதோ பிரமிப்பாய் தன் நண்பனுக்கு ஒரு ரூபாய் தொலை பேசியில் சொல்வான்.அப்போது அவனுக்கு தெரியாது அந்த பிரமிப்பு அந்த ஒரு ரூபாய் நாணயத்தோடு முடிந்து விடும் என்று. இருப்பதற்கு ஒரு இடமும் உண்பதற்கு உணவும் ஊரில் இருந்து எடுத்து வராததால் அவனின் கண்கள் ஏதோ ஒரு தேடலிலேயே இருக்கும். நம்மால் முடியும் என நினைத்து வந்தவனை சென்னை முடிந்த அளவுக்குப் புரட்டிப் போடும்.அவன் விழுந்து எழுகின்ற இடங்களில் மட்டும் முட்களாய் இருக்கும்.அவனை தூக்கி நிறுத்த கால்கள் படாத பாடு படும் என்பதை அவன் பக்கத்தில் இருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.அப்போது தான் அவனுக்குப் புரியும் இது வரை வாழ்ந்தது வாழ்க்கை அல்ல இனி வாழ்வது தான் வாழ்க்கை என்று.எப்படியும் தின தந்தி அவனுக்கு தங்கும் வசதியுடன் ஒரு வேலையைப் பெற்று தந்து விடும்.கிடைத்த வேலையை செய்து பிடித்த வேலையை நினைத்து புலம்புவதை அவனின் சக நண்பர்கள் அடிக்கடி கேட்கலாம்.இரு சக்கர வாகனம் இவன் கனவில் மட்டுமே சொந்தமாக்கி இருந்ததால் இலகு ரக வாகனங்கள் அவனின் கண்ணுக்கு மட்டும் கனரக வாகனமாய்த் தெரியும்.கிடைத்த வேலை படுத்தி எடுக்கும்.பிடித்த வேலை இரவுகளில் தூக்கத்தை துரத்தி அடிக்கும். எப்படியும் ஒரு நாள் தானும் ஒரு பாரதிராஜாவாகனும் என்ற கனவு மட்டும் அவன் விழிப்பதற்கு ஒரு நொடிக்கு முன் வந்து விட்டு போகும்.அப்படியே வந்த தூக்கமும் அந்த கனவோடு போகும்.இப்படிப் பட்டவனை நீங்கள் பார்க்க எங்கும் தேடி போகவேண்டியதில்லை.உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கலாம்.பேருந்து பயணத்தில் உங்கள் பக்கத்து இருக்கையில் இருக்கலாம்.நீங்கள் காரில் போகும் போது நடந்துப் போய்கொண்டு இருக்கலாம்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்து செல்லுங்கள்.ஏனெனில் அவன் ஏதோ ஒரு கனவில் நடந்து கொண்டிருப்பான்.

கருத்துகள் இல்லை:

என்னைப் பற்றி

எனது படம்
நான் இணையதளத்தில் போராளி ஆக வேண்டும் என்ற ஆசையில் உருவானது இந்த மின் பக்கம். எதையோ சொல்ல வந்து எது எதையோ சொல்லுவேன், ஆமா இது தான் என் வேலை. உங்களுக்கு பிடிக்காதது மட்டும் தான் இங்க இருக்கும். புதிதாக இருக்கிறதே என்று எதையும் ஆவலாக தேடாதீர்கள். ஏமாற்றங்களுக்கு இந்த தளமோ பதிவரோ பொறுப்பல்ல.... (குறிப்பு) சட்டதிட்டத்திற்கு புறம்பானது.