என் தமிழ் மக்கள் அதிகமாய் பேசுவது இல்லை ஆனால் அதிகமாய் கேட்கிறார்கள்.எல்லோருடைய காதுகளிலும் ஹெட் செட்! பின்னால் வரும் வாகனம் கூட தெரியாமல் மெய் மறந்து பாடல் கேட்டு கொண்டு போகிறான் என் சக நண்பன்.ஒலி எழுப்பியும் நகராத அவனை வாகன ஓட்டுனர் "வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"என வசைப் பாடுவதும் எனக்கு கேட்கிறது. முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்யும் போது சகப் பயணியோடு பேசிக்கொண்டு வருவார்கள்,பேசிக்கொண்டு போவர்கள்.தற்போதெல்லாம் காதில் எதையோ மாட்டிக் கொண்டு வருகிறார்கள் மாட்டிக் கொண்டே போகிறார்கள்.பக்கத்து இருக்கையில் இடியே விழுந்தாலும் தட்டி விட்டு போய்விடுகிறார்கள்.அலைபேசியில் பேசி கொண்டே உயிரை விட்ட அற்ப ஆயுள் கொண்ட ஒருப் பெண்ணின் பெற்றோர் கண் முன் கதறி அழும் போது தொலை தொடர்பு சாதனங்கள் எதற்குடா நமக்கு என்று நினைக்க தோன்றியது.அதுவும் அந்தப் பெண்ணின் தாய் அந்த அலை பேசியைக் கட்டி கொண்டு அழும் போது புத்தர் ஏன் துறவறம் பூண்டார் என எனக்கு புரிந்தது.தினம் தினம் அலைபேசியால் நிகழ்கிற கொலைகளும்,தவறிப் போன அழைப்பால் உருவான காதலைப் பற்றியும் ஏதாவது ஒரு தின பத்திரிகை சொல்லிவிடுகிறது.அலை பேசிகள் கண்டுபிடிக்கப் பட்ட போது இப்படியான நிகழ்வுகள் நிகழும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.தகவல் தொடர்புக்கென்று உருவாக்கப்பட்ட அலைபேசிகள் தவறிப் போவதற்கு பயன் பட்டு கொண்டிருக்கிறது.அலைப் பேசியை பிரிந்து ஒரு சில நிமிடங்கள் கூட இருக்க முடியாதவர்கள் நம்மில் பலப்பேர் இருக்கலாம்.அலைபேசி இல்லாத நேரங்களில் ஏதோ தன் ஒரு கையை இழந்துப் போன ஒரு பிரம்மை நம் எல்லோருக்கும் இருக்கலாம்.தன் குடும்பத்தோடு செலவழிக்க முடியாத பொன்னான நேரங்களை நாம் உயிரில்லாத அலைப்பேசியிடம் அல்லவா செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.அப்படி என்ன இருக்கிறது அதில் எனத் தெரியவில்லை.பேசிக்கொண்டே நடப்பதும்,பேசிக்கொண்டே திரிவதும்,பேசிக்கொண்டே அழுவதும்,பேசிக்கொண்டே சிரிப்பதும் சில நாட்களாக எனக்கு அன்னியமாய்த் தெரிகிறது.பக்கத்தில் நடக்கிற எதுவும் கவனிப்பதில்லை.வருவது ரெயிலேன்று தெரியாமல் தண்டவாளங்களை கடப்பதும், ஏதோ வித்தை காட்டுவதுப் போல நினைத்து கொள்கிறார்கள் அலைப்பேசிக் காதலர்கள்.வரும் போதுப் பார்த்து கொள்வதை,வந்தப்பின் பார்த்து கொள்ளலாம் என சுலபமாய் பேசி கொண்டே செல்வதால் தான் பல ரயில்கள் பேச்சாளர்களை கொன்று விட்டு போய்விடுகின்றன.எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தாலும் வாகன ஓட்டிகள் தலையை சாய்த்துக் கொடு பேசுவதை விடுவதாய் இல்லை. அதனால் தான் எமனும் இப்படியானவர்களை விடுவதாய் இல்லை.எனக்கு தெரிந்த வரை யாரும் இங்கு ஊமைகள் இல்லை, அதற்காக அலைபேசியை உபயோகப் படுத்தி குடும்பத்தார் எல்லோரையும் ஊமயாக்கிவிடுகிறார்கள்.சிலர் பேசி சாவார்கள்,.சிலர் பேசாமல் சாவார்கள்,ஏன் பேசிக்கொண்டே சாகிறார்கள். விடைத் தேட வேறெங்கும் போக வேண்டாம்.விடை நமக்குள் தான் இருக்கிறது....
நடைப் பயணம் தொடரும்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக