நலம் நலமறிய ஆவல்.நீ இங்கு சுகம்,நான் அங்கு சுகமா, இப்படி ஆரம்பித்தப் பல கடிதங்களுக்கு உன்னிடத்தில் இருந்து பதில் இல்லாத போது, இந்த கடிதத்தை எப்படி தொடங்கினால் என்ன. இருந்தாலும் நலம் விசாரிக்காமல் எந்த ஒரு கடிதத்தையும் என்னால் உனக்கு எழுத முடியவில்லை.குட்டிமா எவ்வளவு பெரிய பிரச்சனையாய் இருந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் சரியாகி விடுகிறது, ஆனால் நீ தந்த இந்த பிரச்சனையைத் தான் எப்படி சமாளிப்பது என தெரியவில்லை.எனக்கான சமாதானத்தை நீ வந்து தராதவரை, என்னால் சந்தோஷமாய் இருப்பது கடினம் தான்.என்னை விட்டு விட்டு போன அந்த நாளை நீ மறந்து விடலாம்,ஆனால் இன்னும் அந்த நாளிலேயே இருக்கிற நான் எப்படி மறப்பது. நீ பத்திரமாய் இருக்க வேண்டுமானால் நான் உன்னை விட்டு பிரிந்து விட்டேன் என பத்திரம் எழுதி தர சொல்லுகிறார்கள் உன் பெற்றோர். நீ பிரிந்துப் போன பிறகு நான் பத்திரமாய் தான் இருப்பேன் என என் பெற்றோருக்கு உங்களால் எழுதி தர முடியுமா? உனக்கு தெரியாது குருடன் பூங்காவை சுற்றி வருவதைப் போலத்தான், நாம் சந்தித்துக் கொண்ட இடங்களை நான் சுற்றி வருகிறேன்.எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் நீ என்னை விட்டு போனதற்கான காரணம் மட்டும் தான்,ஏன்,எதற்கு,எப்படி என என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.என்னை விட உன்னை வேறு யார் அதிகமாய்ப் பார்த்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. உன்னை எவ்வளவு அதிகமாய் நேசிக்கிறேன் என்று என்னோடு வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் என அடிக்கடி சொல்வேனே, இப்போது அந்த பாக்கியம் என் அம்மாவுக்கு கிடைத்திருக்கிறது. ஐந்து மாத குழந்தைப் பாலுக்கு அழுகிறது என்றுத்தான் இந்த உலகம் சொல்லும், அது அம்மாவின் தோழுக்குத் தான் அழுகிறது என்பதை யார் வந்து சொல்வார்கள்.நீயும் உன் நினைவுகளும் ஒன்று தான்,கொள்வீர்கள் ஆனால் சாகவிட மாட்டீர்கள்.எல்லாப் பொருள்களும் உன்னையே நினைவு படுத்துவதால் நினைவெல்லாம் நீ என்று ஆகி விட்டது எனக்கு. தற்கொலை முடிவுகள் கோழைத்தனம் என்றாலும் அதிலும் எனக்கு தோல்விதான்.உனக்குத் தெரிந்து நான் செய்த காதல் உன்னை மறக்க முடியாமல் செய்கிறது. உனக்குத் தெரியாமல் நான் செய்த காதல் தான் என்னை இயங்க விட முடியாமல் படுத்துகிறது. நான் நேசித்தப் பொருளை இன்னொருவர் உடைத்து விடுவார் எனத் தெரியாமல் இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறேன். இதை என்னவென்று சொல்வது. எல்லாம் முடிந்து ஒன்று மட்டும் தெளிவாய்த் தெரிகிறது, நீ எனக்கு பிடித்த உலகமாய் இருந்திருக்கிறாய், நான் உனக்குப் பிடித்த விளையாட்டாய் இருந்திருக்கிறேன். குட்டிமா உனக்கான எல்லாமே இன்னும் பாதுகாப்பாய் இருக்கிறது என்னிடத்தில், தொலைத்து விட சொல்லி மந்திரித்தே விட்டாலும் முடியாது என்னால். வாழ்ந்த உலகம் இறந்த காலத்தில் இருக்கும் போது இருக்கிற காலத்தை நீ இல்லாமல் நான் எங்கேப் போய்த் தேடுவது. உனக்காக அலங்கரிக்கப் பட்ட கவிதைகள் இன்று தர்ம சங்கடத்தில் இருப்பதை யாராவது உன்னிடம் சொல்வார்களா! உன் தோழிகளைப் பார்த்தால் நான் ஒளிந்து கொள்கிறேன், அவர்களைப் பார்த்தால் என் கண்ணீர் கூட காட்டிக் கொடுத்து விடும் நீ என்னோடு இல்லை என்பதை. உனக்கு சாதகமான முடிவுகள் எல்லாம் எனக்கு பாதகமாய் மாறியதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. உன்னை மன கோலத்தில் பார்த்த கனவுகள் எல்லாம் என் கண்ணைக் கொத்துகின்றன.என் கனவுகளின் ஏளனப் பார்வையில் இருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. குட்டிமா உன் நினைவுகளிடமிருந்து என்னால் தப்பி பிழைக்கவும் முடியவில்லை. நீ இல்லாமல் பிழைத்திருப்பது எனக்கு பிழைப்பில்லை என்றுத் தோன்றுகிறது. கடைசியில் நான் கொடுத்த எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விட்டாய் என்னை தவிர? நீ இல்லாமல் என்னை தேடுவது அவ்வளவு சுலபமில்லை, இருந்தாலும் தேடிப் பார்க்கிறேன் எங்கே தொலைத்தாய் என்று. கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன், இல்லையென்றால் யாரிடமாவது சொல்லி அனுப்புகிறேன் நான் தொலைந்தேப் போய்விட்டேன் என்று...
இப்படிக்கு இழந்தவன்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக