திங்கள், 17 செப்டம்பர், 2012

எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்

காதலை நினைத்துக் கொண்டிருப்பதை விட மோசமானது அதை நினைததுக் கொண்டு தூங்க முயற்சிப்பது...... 

எல்லோர் மனதிலும் தொலைந்து போன ஒரு காதலோ,சூழ்நிலையால் பிரிந்து போன காதலோ,ஏமாந்து போன ஒரு காதலோ,ஒருதலையாய் காதலித்த காதலோ,சொல்லாமல் விட்ட காதலோ,மறந்து போன ஒரு காதலோ இருக்கிறது என்பது சாதாரண விஷயமா.அதை காதல் என்று சொல்பவர்களை விட கதை என்று சொல்பவர்கள் தான் அதிகம்,எத்தனை வகையான மனிதர்கள்,எத்தனை வகையான காதல்,இ
ப்போது நினைத்தாலும் கண்ணீர் கொடுக்கிற காதல் அப்போது எப்படியானதாக இருந்திருக்கும்.எல்லாவற்றையும் மறந்து நம் காதலனையோ,காதலியையோ நினைத்திருந்த நிமிடங்களை நினைக்கும் போது அழாமல் இருக்க முடிகிறதா நம்மால்,பிரிந்து போவது சகஜம்,மறந்து போவது சகஜமா?எல்லாவற்றையும் துறந்து தனக்கு பிடித்தவருடன் வாழ,வீட்டை விட்டு வெளியேறுகிற காதல் சாதாரணமானது என நம்மால் எடுத்துக் கொள்ள முடியுமா?
இன்னும் தன் பழைய காதலை நினைத்து திருமணம் செய்யாமல் இருக்கும் ரமேஷ் அண்ணாவின் காதலை எந்த வகையில் சேர்ப்பது,விரும்பியவள் இல்லை என முடிவானதும் மருந்து குடித்து இறந்து போன நரேஷின் காதலை எப்படி சொல்வது,இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் இல்லை என்றதும் விஷம்குடித்து இறந்து போன ஜெகன்,உமாவின் காதல் அவர்களின் குடும்பத்திற்கு எதை கொடுத்திருக்கும்.அவன் என்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி அழுத நான்சியின் காதலும் அவளும் எவ்வளவு காயப்பட்டிருப்பார்கள்,ஐந்து வருடமாய் காதலித்தேன்,இப்போது இல்லை என்று சொல்லும் உங்கள் நண்பரின் காதல் அவரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி இருக்கும்,எப்போதோ விட்டு போன என் ஏஞ்சல் பற்றிய காதல் எத்தகைய இழப்புகளை என்னுள் ஏற்படுத்தி இருக்கும்,காதலிக்கிறவளிடம் காதலை சொல்லாமல் பயந்து கொண்டே இருக்கும் அரவிந்தனின் காதல் எப்படியான ஒரு ஆசையை அவன் மனதில் விதைத்திருக்கும்,சொல்லிய காதல் ஏற்றுக்கொள்ளப்படாத போது முத்துவின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படியாய் இருக்கும்,பேஸ் புக்கில் நான் காதலிக்கலாம வேண்டாமா என பதிவிடும் ஒருவனின் மனநிலை எப்படில்லாம் அலைபாயும்,அதற்க்கு பதிலிடும் ஒருவரின் பதில் எப்படியெல்லாம் இருக்கும்,கணவனிடம் சண்டையிடும் போது வந்து போகிற காதலனின் நினைவு அப்போது அவளுக்கு சந்தோசத்தையா தந்துவிட்டு போய் இருக்கும்,பிரிந்து போன ஒரு காதலர்கள் எங்காவது ஓரிடத்தில் சந்தித்துக் கொள்கிற நொடி எப்படியான ஒரு சந்தோசத்தை பறித்திருக்கும் இருவரிடமிருந்தும்.தன்னுடைய காதலை மனதிற்குள் வைத்து வெளியே சிரிக்கிற ஒருவனின் இதயம் இதயமாகவா இருக்கும்.அவன் அழுது வெடிக்கிற நொடியை நம்மால் அனுபவிக்க முடியுமா?காதல் என்ற ஒரு வார்த்தைக்காக எல்லாவற்றையும் இழந்தவரின் வாழ்க்கை அதற்கு மேல் இனிமையாகவா இருக்க போகிறது.காதல் இல்லை என முடிவான அந்த ஒரு இடத்திலேயே இன்னும் இருப்பவர்கள் எத்தனை பேர்.உறங்கும் ஒரு நொடிக்கு முன்பாக விழியோரம் வழியும் ஒரு துழி கண்ணீர் எப்படியான ஒரு காதலை நினைத்து பார்த்திருக்கும்.நிராகரிக்கப் பட்ட ஒரு காதல் இப்போது எங்கெல்லாம் விழித்துக்கொண்டிருக்கும்,இல்லாமல் போன காதலை நினைத்து தூங்க முயற்ச்சிக்கிற கண்கள் எதையெல்லாம் தேடி அழு(த்)துப் போயிருக்கும்.ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு பாடல் எத்தனை ஆண்களுக்கு இரவு நேர தாலாட்டாய் இருந்திருக்கும்,ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு பாடல் எத்தனை பெண்களுக்கு நல்ல உறக்கத்தை தந்திருக்கும்.காதல் சாதாரணமானது தான்,அது ஏற்படுத்துகிற தாக்கம் சாதரணமானதா.....
காதலின் தாக்குதலில் இருந்து தப்பி வந்து இதை எழுதுகிற என் காதல் இன்னும் அப்படியே இருப்பதை இனி எந்த பதிப்பில் சொல்ல.......

திங்கள், 3 செப்டம்பர், 2012

மகாபலிபுரமும் ஆறு நாட்களும்.....

                             இதற்கு முன்னாள் எங்களில் பாதி பேர் மகாபலிபுரம் சென்றதில்லை. சிற்பக் கலை கூடம் என்பது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். ராயர் கோபுரம்,வெண்ணெய்கட்டி உருண்டை,அர்ஜுனா பேலஸ்,இப்படி புருவம் உயர்த்திய இடங்கள் அதிகம். இந்த ஆச்சிரியங்களை தாண்டி எங்களை பெரிதும் பாதித்த  மகாபலிபுரத்தை நம்பி இருக்கும் சிற்பக் கலைஜர்கள்,அவர்களின் குடும்பம், ஜோசியக்காரர்கள், குறிசொல்பவர்கள்,மீனவர்கள்,பாசி விற்கும் மராட்டிய பெண்கள்,முகத்தை மூடியப்படி வலம் வரும் காதலர்கள்,ஐஸ் க்ரீம் பெட்டியை தள்ளிக்கொண்டு வரும் வியாபாரிகள்,ஒரு நொடி புகைப்படம் எடுத்து தரும் புகைப்பட நிபுணர்கள்,இங்கு படம் பிடிக்க கூடாது என சொல்லி விரட்டி விடும் ஆதிக்கவாதிகள்,இவர்களை தவிர்த்து எங்களால் மகாபலிபுரத்தை பார்க்க முடியவில்லை.
                                                                                                                                                                                                 
ஆறு  நாட்கள் பயிற்சி என தொடங்கிய எங்கள் இருபது பேருக்கும் ஒவ்வொரு அனுபவங்கள்.புதியதலைமுறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அந்த நொடி இன்னும் நினைவில் இருக்கிறது.நாங்கள் மொத்தம் இருபது பேர்.வேறு வேறு பாதையில் இருந்து வந்த எல்லோரும் இப்போது ஒரு பாதையில் செல்கிறோம் என்பது சின்ன விஷயமல்ல.....

முதலில் எங்கள் இருபது பேரை பற்றி....

நாங்கள் மிகப் பெரிய அனுபவசாலிகள் இல்லை.ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமையை கொண்டவர்கள் என்பது மட்டுமே எங்களின் தகுதி..எங்களை தேர்ந்தெடுத்த விக்ரம் சாருக்கு மட்டுமே இது தெரியும்.காமரா,கனவுமாக வரும் வினோத் பற்றி அவரது புகைப்படங்களே சொல்லும்,ஏதோ பள்ளி கூட ஆசிரியர் போல வரும் பிரேமா அக்காவை அவ்வளவு எளிதில் எடை போட்டு விட முடியாது.அவரின் முக பாவனைகள் நவரசங்களையும் தாண்டி நிற்கும் என்பது என் தனி பட்ட கருத்து.பாரதியை அவரின் பெயரை கொண்டே அடையாளம் கண்டுகொள்ளலாம்.எங்கும் தமிழ்,எதிலும் தமிழ் என்பதே தலைவரின் குறிக்கோள்.ஒருவித புரிதலோடு அவரை அணுகினால் நாளை நீங்களும் அனுபவசாலியாகலாம்.எதற்க்கெடுத்தாலும் சிரித்தே மழுப்பும் திறமை எல்லோருக்கும் வாய்க்காது,அப்படியொரு திறமை கொண்டவர் தான் இனியன்.இவரிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.கேரளாவில் இருந்து வந்து தமிழில் சக்கை போடு போடும் சுந்தரை என்னால் மறக்க முடியாது.எந்த விஷயமானாலும் என்னிடம் கேட்கும் அவனை நான் தவறவிட்டால் நான் உண்மையில் துரதிஷ்டசாலிதான். எந்நேரமும் எதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் இசை பிரகாஷ் எங்களுக்கு ஆச்சிரியமாய் தெரிவான்.மழையில் நனைவது என்றால் இசைக்கு அவ்வளவு பிரியம்..லாவண்யா நம் எல்லோர் வீட்டு பக்கத்திலும் இருக்கும் பக்கத்து வீட்டு பெண்,கோபமும் இருக்காது,சோகமும் இருக்காது,ஆனால் அன்பு இருக்கும்.மச்சி உன்னால மட்டும் தான் முடியும் வேற யாராலையும் முடியாது இப்படியான வார்த்தைகள் இனி எங்கேனும் கேட்க முடிந்தால் எனக்கு ஜெய் சந்திரன் தான் நினைவுக்கு வருவான்.என்னை போல ஒருவன் தான் மது,பேருந்தை எதிர்ப் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பயணியைப் போல முகத்தை எப்போதும் வைத்திருப்பது அவனுக்கு கூடுதல் பலம். நல்லா வருவான் என்பது அவனின் நடவடிக்கையில் தெரியும்.இத இப்டி எடுக்கணும்,அத அப்டி படம் புடிக்கணும் என்ற சரவணனின்  அக்கறையே சொல்லும் பின்நாளில் நல்ல இயக்குனராக வருவான் என்று,எல்லோருக்கும் பாடல் போடுகிற,சந்தர்ப்பம் கிடைத்தால் ஆடுகிற அரவிந்தை யாராலும் யூகிக்க முடியாது,திடீரென வந்து நீ எழுதுனத படிச்சு காமிடானு சொல்வதிலாகட்டும்,படிச்சதுக்கு அப்புறமா கைதட்டி பாராட்டுறது ஆகட்டும் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விசிறி அவன்.இப்போதெல்லாம் எது எழுதினாலும் அவனிடம் காட்ட வேண்டும் போலவே இருப்பதை எப்படி அவனிடம் சொல்வது.பத்தாம் வகுப்பு மாணவியான ராஜியின் அடையாளமே அந்த சுறுசுறுப்பும்,கணீர் குரலும் தான்,ஒரு சிறிய எறும்பு ராஜியை கடந்து போவதை ஏதோ ஒரு யானை கடந்து போவதாய் சொல்லும் அந்த நேர்த்தியை பற்றி சொல்லியாக வேண்டும்.குழந்தை மொழி பேசும் அஸ்வினியை யாரும் விட்டு கொடுக்க மாட்டார்கள்,அவ்வளவு வெள்ளந்தி பெண்ணாக தான் வளைய வருவாள்.எப்போதும் குடும்ப நினைவுகளுடன் வரும் ஹரிணி அக்கா எல்லோருக்கும் ஒரு பாடமாக இருந்தாங்க,சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரித்தும்,வேலை நேரத்தில் வேலையுமாக இருந்தது அக்கா ஒருவராகத்தான் இருக்கும்.எதுவும் தெரியாததைப் போல இருக்கும் தேவி சாதாரண பெண் இல்லை,சசி சாரிடம் பாராட்டு வாங்கிய ஒரே பெண் அவங்களாகத்தான் இருக்கும்.கலாய்ப்பதில் பட்டம் பெற்ற ஒரே நபர் முரளியாகத்தான் இருக்கும், அப்படி ஒரு நேர்த்தியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எல்லோரையும் கலாய்ப்பான்.அவன் கூட இருந்தா நேரம் போறதே தெரியாது.லெனின் அக்காவுடன் ஐந்து நாட்கள்னு ஒரு புத்தகமே எழுதலாம்,ஆனா எல்லா பக்கமும் காலியாகத்தான் இருக்கும்,எப்போதும் அமைதியாவே இருப்பாங்க,ஜோக்னு சொன்னா மட்டும் தான் சிரிப்பாங்க,ஆனா அவங்களோட பொறுப்பு என்னவென்று எங்க எல்லோருக்கும் தெரியும்,அளவாக பேசி,அளவாக நடக்கும் ப்ரியாவ எப்போதும் ஒரு புன்னகையோட பார்க்கலாம்,அவ்வளவு அமைதி. எப்போதுமே ஒரு பரபரப்புடனும்,ஒரு எதிர்பார்ப்புடனும் இருக்கும் பிரச்சன்னா ஆணாக பிறக்கவேண்டியவள்,அப்படி ஒரு தைரியம்.புத்திசாலி பெண்.வந்த அனைவருக்கும் பிடித்து போன ஒரு சிரிப்பு பொம்மையாய் நான் இருந்திருக்கிறேன் என்பது என்னை பொறுத்தவரை சந்தோசமான விஷயம் தான்.ஆனால் மற்றவர்களின் பார்வை எப்படி என அவர்கள் தான் சொல்ல வேண்டும்.இவர்களுடனான அந்து ஆறு நாட்கள் எப்படி இருந்தது என்பதை என் மூளையின் E பதிப்பில் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது.

நிகழ்வு 
                இதற்க்கு முன்னதாக நாங்கள் கலந்து கொண்ட பயிற்சி பட்டறைகளில் இது முற்றிலும் வேறுபட்டது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்.கேமரா பற்றி தெரிந்திருந்த எங்களுக்கு கேமரா என்றால் என்னவென்று அந்த ஆறு நாட்களில் தான் தெரிந்து கொண்டோம்.கேமரா பற்றிய அறிவே இதற்க்கு முன் இல்லாமல் அதை எப்படி எல்லாம் பயன்படுத்தினோம் என்பதை நினைக்கும் போது சிரிப்பிற்கு பதிலாக வேதனையே இருந்தது.எங்களுக்கு வகுப்பு எடுத்த சசி சாரை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.அவ்வளவு பெரிய மனிதர்,எங்களுக்கு கேமரா பற்றி எதுவும் தெரியாது என தெரிந்ததும் என்னவெல்லாம் நினைத்திருப்பாரோ.எதையும் வெளிக்காட்டாமல் அவர் சொல்லி கொடுத்த விதம் வித்தியாசமானது.எல்லோருடைய கேமரா பதிவுகளிலும் தவறுகள் இருந்தது எங்களுக்கு தெரியும்,ஆனால் அதை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டி அவர் மேற்கொண்ட உத்திகள் சாதாரணமானது அல்ல.குறிப்பாக அவரின் கோபங்களை அவர் கட்டு படுத்தி இருந்தது அவர் முகத்தில் தெரிந்தது.என்றாவது எங்களில் ஒருவரை நினைத்து அவர் பெருமை கொள்வார் என்பது மட்டும் ஆணித்தரமான உண்மை. ஆசான் என்ற வார்த்தையை தவிர அவரைப் பற்றி சொல்ல எங்களுக்கு வேறு வார்த்தை இல்லை.எங்களுடன் சேர்ந்து வந்த அவந்தி மேடத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள்.தமிழ் மொழியில் அவர்கள் பேசுவதை கேட்க ஆச்சரியமாய் இருக்கும்.எங்களோடு வந்து தொழிநுட்பங்களை கற்று கொடுத்த அவர்களை நாங்கள் என்றாவது நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம் என்பது மட்டும் உண்மை.பாலா அண்ணா எங்களுக்கு சொல்லிய அறிவுரைகள் ஒவ்வொன்றும் உண்மையாய் இருந்தது.எங்களின் வளர்ச்சிக்கு இவர்கள் மூன்று பேரின் பயிற்சி கை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நான்காவது நாளில் வந்த விக்ரம் சார் ஐந்து நொடியில் எங்கள் இருபது பேரின் மன நிலையையும் தெரிந்து கொண்டு போனது சாதாரண நிகழ்வு இல்லை. அடிக்கடி வந்து போகும் பிரபு சார் இப்போ எப்படி இருக்கு உங்களுக்கு என்று கேட்டு அவரின் அக்கறையை காட்டிவிட்டு போவார்.அதே போல ப்ரீத்தி மேடத்தைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் எங்களை கட்டி மேய்க்க அவர்கள் பட்ட பாடை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.இருந்தாலும் எங்களின் எல்லா செயல்களையும் பொறுத்துக் கொண்ட அவர்களின் மீது ஒரு மரியாதை இருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்.அங்கிருந்த எல்லா நாட்களிலும் எங்களுக்கு உணவு பரிமாறிய அந்த மூன்று பேரையும் மறக்க முடியாது,குறிப்பாக அந்த நேபாளி நிக்கியை சொல்லியாக வேண்டும்.ஆறு நாட்களும் எங்களோடு இருந்த வாகன ஓட்டுனர் சாம் அண்ணாவிற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வாய்ப்பை வழங்கிய புதியதலைமுறை நிறுவனத்தை எந்த நிலையில் இருந்தாலும் மறக்கமுடியாது என்பதை நாங்கள் இருபது பெரும் உணர்ந்திருக்கிறோம்.ஆறு நாட்கள் மகாபலிபுரத்தில் நடந்தது எல்லாம் சின்ன சின்ன  விஷயங்கள் தான்,ஆனால் அந்த அனுபவங்கள் சின்ன விஷயமல்ல....

ஜவ்வாது மலையும் மூன்று நாளும்.....

ஒருப் பயணம் நமக்கு எதெல்லாம் கற்றுக் கொடுக்கிறது.எதிர்பாராத எதிர்பார்ப்புடன் தொடங்குகின்ற பயணம் எப்படியான அனுபவங்களை நமக்குள் பதிந்துவிடுகிறது.ஒரு நொடியில் நம்மை ஊமையாக்கிவிடும் சாலையோர கண்ணீராகட்டும்,பறந்து போகிற சொகுசு காரில் மிதந்து    வரும் சந்தோசமாகட்டும்,பஞ்சரான காரின் பின் இருக்கை  குழந்தையின் புன்னகயாகட்டும் எல்லாமே ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துவிட்டு தான் கடந்து போகின்றன.அப்படியொரு அனுபவத்தை எங்களுக்குள் புதைத்து விட்டுப் போன பயணம் பற்றிய பதிவு தான் இந்த பக்கம்.......
                           
 எதையோ தேடித் போன பயணத்தில் எது எதையோ கண்டுபிடிக்க முடிந்தது.மலைவாழ் மக்கள் தொலைத்தவற்றை கண்டறிய முடிந்ததே தவிர எதையும் மீட்க முடியவில்லை.நகரத்தார் மாறிவிட்டார்கள் என்பதும் அவர்கள் கிராம மக்களை மாற்றி விட எவ்வளவு தூபம் போடுகிறார்கள் என்பதும் எங்களுக்கு தெளிவாக புரிந்தது." என்ன இல்லை இங்கு" என்ற தோணியில் தேடிய எங்கள்  பயணத்தில் "எதிர்பார்த்தது இல்லை அங்கு" என்பது தெளிவாக புரிந்தது.பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்கள்,ஆசிரியர் இல்லாத பள்ளிகூடங்கள்,கனவுகள் இல்லாத அவர்களின் இரவுகள்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணின் வேலி  தாண்டும் பரிதாபம்,கீறிப் பிள்ளையை உணவாகத் தர வந்த உபசரிப்பு,வழிகாட்டிய பிள்ளைகள்,எங்களை தீர்க்கதரிசியாகப் பார்த்த தலைவர்கள்,கிராம் கணக்கே எடை கொண்ட குழந்தைகள்,மனவளர்ச்சி இல்லாத ஹேமலதா,ஜிம்னாஸ்டிக் பாரதி,,பட்டாம் பூச்சியோடு விளையாடிய சந்தியா,பெயரைத் தவிர வேறு எதுவும் தெரியாத வினோத்,தேவிக்கு நாற்று நடக் கற்றுகொடுத்த வெண்மணி அக்கா,லாவண்யாவுக்கு நண்பனாய் மாறிப் போன சிவா,சுந்தரிடம் மல்லு கட்டிய குடிகார வெள்ளந்தி மனிதர்,பேனா கொடுத்த தாத்தா,எனக்கு முடி வெட்டி விட்ட சங்கர் அண்ணா,எங்கள்  மூவரையும் யோசிக்க வைத்த மணிமேகலை பாப்பா,உங்களுக்கு கொடுக்க எதுவும் இல்லை என சொல்லிய சரிதா அக்கா........
                 எத்தனை எத்தனை மனிதர்கள்,எப்படி எப்படியான வாழ்க்கை, எவ்வளவு கஷ்டங்கள்,அங்கு உணர்ந்த விஷயங்களை என் மூளையின் இணையதள பதிப்பில் பதிவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல,அழ வைத்த நிமிடங்களாகட்டும்,சிரித்துவந்த நொடிகளாகட்டும்,யோசிக்க வைத்த கணங்களாகட்டும் எல்லாமே சின்ன சின்ன  விஷயங்கள் தான் ஆனால் அந்த மனிதர்கள் சின்ன விஷயம் அல்ல!!!  அவர்கள் உயரத்தில் இருக்கிறார்களே தவிர இன்னும் வளரவில்லை என்பது எவ்வளவு வருத்தமாய் இருக்கிறதோ,அவ்வளவு சந்தோசமாய் இருக்கிறது அவர்கள் இன்னும் மாறாமல் இருப்பது.நாங்கள் கண்டு வந்த மிகப் பெரிய உண்மை "அவர்கள் யாருமே முகமூடி அணியவில்லை" என்பது தான், எல்லோருமே மூடி இல்லாத முகங்களாகவே இருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள்.மிருகங்கள் அங்கு சென்று குடியேறாத வரை......






செவ்வாய், 17 ஜூலை, 2012

ஒவ்வொரு ஊரிலும்....

செயலிழந்துப் போன ஒரு சிம்கார்டை தினம் நூறு முறைத் தொடர்புக்கொள்ள முயன்று தோற்றுப் போகிறது ஒரு இறந்துப் போன இதயம்.....

ஒவ்வொரு ஊரிலும்....
ஒவ்வொரு தெருவிலும்.....

திங்கள், 25 ஜூன், 2012

ஐயோ கடவுளே....


இறைவா உன்னை பற்றி
தான் எழுத போகிறேன்!

உன்னை திட்டுவதற்கு எனக்கு
உரிமை இல்லை...
காரணம் நான் உன்னை
இதுவரைப் பார்த்ததில்லை....

இவ்வளவு நடந்து விட்டது
நீயும் என்னை பார்த்திருக்க
வாய்ப்பில்லை....

நான் உன்னை நம்ப
தயாராக இருக்கிறேன்....

முதலில் நான்
இருப்பதை நீ
உறுதி செய்து கொள்....

வெள்ளி, 8 ஜூன், 2012

படிப்பு


பத்து வயதில்
புத்தக மூட்டையை
தூக்கி பரணில் போட்டேன்....

இருபது வயதில் அதை
எடுத்து பார்க்கும் போது
என் வாழ்க்கை செல்லரித்து இருந்தது....

படிப்பு

வியாழன், 31 மே, 2012

பயங்கரவாதத்தையும் பெண் சிசுக் கொலைகளையும் ஈழத்து அவலங்களையும் கவிதையில் சொன்னால் ரசிக்கும்படி ஆகிவிடுகிறது....

வெள்ளி, 11 மே, 2012

கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....


இரண்டாம் வகுப்பு போகும்
குழந்தைக்கு அ,ஆ
தெரியவில்லை.....

நான்காம் வகுப்பு போகும்
சிறுவனுக்கு
ஆத்திச்சுடி தெரியவில்லை...

சிவாஜி கணேசனை கட்டபொம்மன்
என்கிறான்.....

சாயாஜி ஷிண்டேவை
பாரதியார் என்கிறான்.........

டாடி என்று அழைக்கவில்லை என்றால்
அப்பன் அடிக்கிறான்.......

பள்ளியில் தமிழில் பேசினால்
அபராதம் விதிக்கிறான்.....

கண் முன்னே நடக்கிறது
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....

"யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்
மொழி போல் இனிமையானது
எங்கும் காணோம்"

பாரதி ஐயா இங்கே தமிழையே காணோம்.....

ஐயா
கண் முன்னே நடக்கிறது
கேட்டால் "மொக்க" போடாத என்கிறான்.....

சனி, 5 மே, 2012

உண்மையா இருக்குமோ....

பிரிந்த பிறகு பதிவேற்றப்படுகிற எல்லா
பதிவுகளிலுமே ஒரு கவலை இருக்கிறது ஆண்களிடத்தில்.....

பிரிந்த பிறகு பதிவேற்றப்படுகிற எல்லா பதிவுகளிலுமே
ஒரு மித மிஞ்சிய ஆணவம் இருக்கிறது சில பெண்களிடத்தில்.....


ஞாயிறு, 25 மார்ச், 2012

பக்கத்து வீடு....

"உன்னை நேசிப்பதை போல உன் அயலாரையும் நேசி" "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் இருக்கும்" "யாதும் ஊரே யாவரும் கேளிர்"

எப்படியான வாக்கியங்கள் இவை.உங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் உள்ள உறவை ஒரு நொடி நினைத்துப் பார்த்துவிட்டு இதை படியுங்கள்.அவரிடம் எத்தனைமுறை பேசி இருப்பீர்கள்,உங்கள் சுக துக்கங்களை அவர்களிடம் நீங்கள் பகிர்ந்திருப்பீர்களா? நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் இவர்தான் பக்கத்து வீட்டுக்காரர் என்று.

சென்னை வளர்ந்த நகரம் என்பது நமக்குத் தெரியும், அது நமது நாகரீகத்தை மறந்து வளர்ந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.அசோக் நகரில் இருக்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு சென்ற போது கேட்டேன் பக்கத்து வீட்டில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்று,நான்கைந்து பேர் இருப்பார்கள் என்றார்,எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்ட போது அவர் சொன்னார், வெளியில் கிடக்கும் செருப்புகளின் எண்ணிக்கையை வைத்து தான் என்று.இப்படியான பதிலை நான் எதிர்ப்பார்க்கவில்லை.ஆனால் சென்னை நகர வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்கமுடியுமா? நாம் அத்தி பூத்தார்ப் போல அண்டை வீட்டாரிடம் பேசுகின்ற வார்த்தைகள் "நாங்க ஊருக்கு  போறோம்,வீட்டை பார்த்துகங்க" என்பது தான்.எவ்வளவு ஆழமான வார்த்தைகள் என்பதை பாருங்கள்.இப்படியான உறவுகள் வீட்டை வேண்டுமானால் பார்த்துகொள்ளும்,நம்மை எப்படி பார்த்துகொள்ளும்.பக்கத்து வீட்டில் எது நடந்தாலும் நமக்கு கவலை இல்லை,பிறகு நம் வீட்டில் ஏதாவது நடந்தால் அவர்கள் எப்படி பார்த்துகொள்வார்கள்.ஒரு கதை சொல்வார்கள் ""என் பக்கத்து வீட்டுக்காரனை ஒருவன் அடித்தான் நான் போய் கேட்கவில்லை,என் எதிர் வீட்டுக்காரனையும் அடித்தான் நான் போய் கேட்கவில்லை,கடைசியில் என்னையும் அடித்தான் கேட்க யாருமே இல்லை" என்று.இப்படியான வாழ்க்கையை நான் இங்கு தான் பார்க்கிறேன்.எங்கள் ஊரில் இப்படியான ஒரு வீட்டையும் நான் பார்த்ததில்லை.என் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் அப்பா ஆயிரம் சண்டைகள் போட்டாலும் அவருக்கு ஒன்று என்றால் அப்பா முன்னிலையில் இருப்பார்,எங்கள் வீட்டில் ஒரு விஷேசம்  என்றால் பக்கத்து வீட்டுக்காரர் முதல் ஆளாக வந்து நிற்பார்.என் அப்பா போன்ற மனிதர்களையோ,என் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற மனிதர்களையோ நான் இது வரை இங்கு சந்தித்தது இல்லை.அப்படியான உறவு இங்கு இருப்பவர்களுக்குத் தேவையில்லையா? பக்கத்து வீட்டுக்காரருடன் நம்மால் பழக முடியவில்லை என்றால் எங்கிருந்தோ வரும் சக ஊழியருடன் எப்படி பழக முடியும்! ஒரு சாதாரண புன்னகை உங்கள் குடும்பத்திற்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் காப்பீட்டை பெற்று தரும்.பக்கத்து வீட்டு மனிதர்களிடம் பழகிப் பாருங்கள் எப்படியான சந்தோசத்தை நீங்கள் தவறவிட்டு இருக்கிறீர்கள் என்பதுப் புரியும்.


நடைப்பயணம் தொடரும்.... (தொலைத்தவைகளைத் தேடி) 

சனி, 24 மார்ச், 2012

ஒரு நிழல் பேசுகிறது....

நான் போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு போகிறவன் இல்லை.அப்படியான மனநிலையில் இது வரை நான் எழுதியது இல்லை என நம்புகிறேன்.என்னை வசைப் பாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது எனவும் நம்புகிறேன்.காரணம் நான் எழுத்தாளன் இல்லை.அப்படி இது வரை நான் கூறியதும் இல்லை.நான் சிரிக்க சிரிக்க கதை பேசுபவன் இல்லை,சேர்ந்து சிரிக்க ஒரு துணை இல்லையே என அழுதவன்.நான் இழந்த அல்லது இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி சொல்வேனே தவிர யாரையும் உருவம் படுத்தி சொல்லமாட்டேன்."என்னால் காயப்பட்டவர்கள் அதிகம்,என்னைக் காயப்படுத்தியவர்கள் மிக அதிகம்."அவை எல்லாமே சந்தர்ப்பங்கள் மட்டும் தான், திட்டமிடல் இல்லை என்பதை நான் அறிவேன்,உங்களுக்கும் தெரியப்படுத்துகிறேன்.நீங்கள் எனக்காக எந்த ஆலமரதுக்கும் சாட்சி சொல்ல வர போவதில்லை,நானும் உங்களுக்காக தீர்ப்பு சொல்ல எந்த நீதிமன்றத்திற்க்கும் வரப்போவதில்லை.அப்படி இருக்க எதற்காக இப்படி ஒரு வாதம்.நான் தோல்வியடைவது முதல் முறை என்றால் உங்கள் காலில் விழுந்து கதறலாம்.தோற்றுக்கொண்டே இருப்பவன் அத்தகைய செயலில் இறங்குவேன் என எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்,என் அப்பா எனக்கு தோல்வியைப் பற்றி சொல்லிக் கொடுத்தாரே தவிர வெற்றியைப் பற்றி சொல்லிகொடுத்தது இல்லை.காரணம் வெற்றியைப் பற்றி நான் தான் என் அப்பாவுக்கு சொல்லிதர வேண்டும் என்பதால்.உங்களது அலட்சியமான பதில்கள் என்னை கஷ்டப்படுத்துமே தவிர அது எந்த வகையிலும் என்னைக் காயப்படுத்தாது.பணிவு,மரியாதை,இவை அனைத்தையும் நீங்கள் பள்ளிப்படிப்பை தாண்டும் முன்பாக மறந்துவிட்டீர்கள் என்பதை உங்கள் அறிவு நூலகம் எனக்கு சொல்லி கொடுத்து விட்டது.ஆத்திச் சூடி தலைப்பு மட்டுமே நினைவிருக்கும் உங்களுக்கு எங்கே "அறம் செய்ய விரும்பு""ஆறுவது சினம்" நினைவிருக்கப் போகிறது.நினைவுகளோடு அழுது புலம்பி இருக்கிறேன்,அது ஒரு வரம் என்பதால்,என்னை நிழல்களோடு அழவைத்து விடாதீர்கள்,அவை ஒரு வகை சாபம் என்பதை நான் படித்திருக்கிறேன்.உங்களுக்குத் தெரியுமா,என் அப்பாவிற்கு என் அக்காவை பிடிக்கும்,என் அக்காவிற்கோ  என் அம்மாவை பிடிக்கும்,என் வீட்டில் உள்ள எல்லோருக்குமே என்னை பிடிக்கும்,எனக்கோ எழுத்தாளர்களான உங்களைத் தான் பிடிக்கிறது.நீங்கள் ஆடி ஓடி விளையாடிய இடத்தில் நான் தற்போது தான் நுழைவு சீட்டிற்கு விண்ணப்பம் செய்திருக்கிறேன்.நீங்கள் வளர்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் வந்துவிட்டேன். உங்களின் வரவேற்ப்பு தலை வாசலில் வேண்டாம்,குப்பைகள் நிறைந்திருக்கும் பின் வாசலாக இருந்தால் அதுவே எனக்குப் போதுமானது.
"விழித்திருந்து இதை  எழுதியது நானல்ல,என் நிழல் என்பதை சொல்லிவிட்டு நான் கிளம்ப தயாராகிறேன்."

                                                                                   நடைப் பயணம் தொடரும்....

வியாழன், 15 மார்ச், 2012

ஈழமும் அப்பாவும்....

1985 ஆம் ஆண்டு எட்டு மாத கை குழந்தையுடன் அவர் இலங்கையில் இருந்து இந்தியா வரும் போது தன் மனைவி குழந்தைகள் காப்பாற்றப் பட்டதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டார்.தாய் மண்ணை விட்டு வந்ததை நினைத்து ஒவ்வொரு முறையும் அழுது கொண்டே இருப்பார்.நானும் அதை பார்த்திருக்கிறேன்,அவருக்கு மகனாய் பிறந்த பின்பு.

ஈழத்து செய்திகளை கேட்டாலே அவரையும் அறியாமல் கண்ணீர் விடுவார்.இன்று நான் பார்த்த அந்த "இலங்கையின் கொலைக்களங்கள்,தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்"என்ற ஆவணப் படத்தை என் அப்பா பார்க்க நேரிட்டால் அப்பா என்னை தவிக்க விட்டு போய் விடுவாரோ என பயமாய் இருக்கிறது.


திங்கள், 12 மார்ச், 2012

அலைப் பேசிக் கொலைகள் ....

என் தமிழ் மக்கள் அதிகமாய் பேசுவது இல்லை ஆனால் அதிகமாய் கேட்கிறார்கள்.எல்லோருடைய காதுகளிலும் ஹெட் செட்! பின்னால் வரும் வாகனம் கூட தெரியாமல் மெய் மறந்து பாடல் கேட்டு கொண்டு போகிறான் என் சக நண்பன்.ஒலி எழுப்பியும் நகராத அவனை வாகன ஓட்டுனர் "வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா"என வசைப் பாடுவதும் எனக்கு கேட்கிறது. முன்பெல்லாம் ரயிலில் பயணம் செய்யும் போது சகப் பயணியோடு பேசிக்கொண்டு வருவார்கள்,பேசிக்கொண்டு போவர்கள்.தற்போதெல்லாம் காதில் எதையோ மாட்டிக் கொண்டு வருகிறார்கள் மாட்டிக் கொண்டே  போகிறார்கள்.பக்கத்து இருக்கையில் இடியே விழுந்தாலும் தட்டி விட்டு போய்விடுகிறார்கள்.அலைபேசியில் பேசி கொண்டே உயிரை விட்ட அற்ப ஆயுள் கொண்ட ஒருப் பெண்ணின் பெற்றோர் கண் முன் கதறி அழும் போது தொலை தொடர்பு சாதனங்கள் எதற்குடா நமக்கு என்று நினைக்க தோன்றியது.அதுவும் அந்தப் பெண்ணின் தாய் அந்த அலை பேசியைக் கட்டி கொண்டு அழும் போது புத்தர் ஏன் துறவறம் பூண்டார் என எனக்கு புரிந்தது.தினம் தினம் அலைபேசியால் நிகழ்கிற கொலைகளும்,தவறிப் போன அழைப்பால் உருவான காதலைப் பற்றியும் ஏதாவது ஒரு தின பத்திரிகை சொல்லிவிடுகிறது.அலை பேசிகள் கண்டுபிடிக்கப் பட்ட போது இப்படியான நிகழ்வுகள் நிகழும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.தகவல் தொடர்புக்கென்று உருவாக்கப்பட்ட அலைபேசிகள் தவறிப் போவதற்கு பயன் பட்டு கொண்டிருக்கிறது.அலைப் பேசியை பிரிந்து ஒரு சில நிமிடங்கள் கூட இருக்க முடியாதவர்கள் நம்மில் பலப்பேர் இருக்கலாம்.அலைபேசி இல்லாத நேரங்களில் ஏதோ தன் ஒரு கையை இழந்துப் போன ஒரு பிரம்மை நம் எல்லோருக்கும் இருக்கலாம்.தன் குடும்பத்தோடு செலவழிக்க முடியாத பொன்னான நேரங்களை நாம் உயிரில்லாத அலைப்பேசியிடம் அல்லவா செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.அப்படி என்ன இருக்கிறது அதில் எனத் தெரியவில்லை.பேசிக்கொண்டே நடப்பதும்,பேசிக்கொண்டே திரிவதும்,பேசிக்கொண்டே அழுவதும்,பேசிக்கொண்டே சிரிப்பதும் சில  நாட்களாக எனக்கு அன்னியமாய்த் தெரிகிறது.பக்கத்தில் நடக்கிற எதுவும் கவனிப்பதில்லை.வருவது ரெயிலேன்று தெரியாமல் தண்டவாளங்களை கடப்பதும், ஏதோ வித்தை காட்டுவதுப் போல நினைத்து கொள்கிறார்கள் அலைப்பேசிக் காதலர்கள்.வரும் போதுப் பார்த்து கொள்வதை,வந்தப்பின் பார்த்து கொள்ளலாம் என சுலபமாய் பேசி கொண்டே செல்வதால் தான் பல ரயில்கள் பேச்சாளர்களை கொன்று விட்டு போய்விடுகின்றன.எவ்வளவு விழிப்புணர்வு கொடுத்தாலும் வாகன ஓட்டிகள் தலையை சாய்த்துக் கொடு பேசுவதை விடுவதாய் இல்லை. அதனால் தான் எமனும் இப்படியானவர்களை விடுவதாய் இல்லை.எனக்கு தெரிந்த வரை யாரும் இங்கு ஊமைகள்  இல்லை, அதற்காக அலைபேசியை உபயோகப் படுத்தி குடும்பத்தார் எல்லோரையும் ஊமயாக்கிவிடுகிறார்கள்.சிலர் பேசி சாவார்கள்,.சிலர் பேசாமல் சாவார்கள்,ஏன் பேசிக்கொண்டே சாகிறார்கள். விடைத் தேட வேறெங்கும் போக வேண்டாம்.விடை நமக்குள் தான் இருக்கிறது.... 
                     
                               நடைப் பயணம் தொடரும்........

சனி, 10 மார்ச், 2012

குட்டிமாவுக்கு ஒரு கடிதம்.....



           நலம் நலமறிய ஆவல்.நீ இங்கு சுகம்,நான் அங்கு சுகமா, இப்படி ஆரம்பித்தப்  பல கடிதங்களுக்கு உன்னிடத்தில் இருந்து பதில் இல்லாத போது, இந்த கடிதத்தை எப்படி தொடங்கினால் என்ன. இருந்தாலும் நலம் விசாரிக்காமல் எந்த ஒரு கடிதத்தையும் என்னால் உனக்கு எழுத முடியவில்லை.குட்டிமா எவ்வளவு பெரிய பிரச்சனையாய் இருந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் சரியாகி விடுகிறது, ஆனால் நீ தந்த இந்த பிரச்சனையைத் தான் எப்படி சமாளிப்பது என தெரியவில்லை.எனக்கான சமாதானத்தை நீ வந்து தராதவரை, என்னால் சந்தோஷமாய் இருப்பது கடினம் தான்.என்னை விட்டு விட்டு போன அந்த நாளை நீ மறந்து விடலாம்,ஆனால் இன்னும் அந்த நாளிலேயே இருக்கிற நான் எப்படி மறப்பது. நீ பத்திரமாய் இருக்க வேண்டுமானால் நான் உன்னை விட்டு பிரிந்து விட்டேன் என பத்திரம் எழுதி தர சொல்லுகிறார்கள் உன் பெற்றோர். நீ பிரிந்துப் போன பிறகு நான் பத்திரமாய் தான் இருப்பேன் என என் பெற்றோருக்கு உங்களால் எழுதி தர முடியுமா? உனக்கு தெரியாது குருடன் பூங்காவை சுற்றி வருவதைப் போலத்தான், நாம் சந்தித்துக் கொண்ட இடங்களை நான் சுற்றி வருகிறேன்.எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் நீ என்னை விட்டு போனதற்கான காரணம் மட்டும் தான்,ஏன்,எதற்கு,எப்படி என என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.என்னை விட உன்னை வேறு யார் அதிகமாய்ப் பார்த்துக்கொள்வார்கள் என எனக்குத் தெரியவில்லை. உன்னை எவ்வளவு அதிகமாய் நேசிக்கிறேன் என்று என்னோடு வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும் என அடிக்கடி சொல்வேனே, இப்போது அந்த பாக்கியம் என் அம்மாவுக்கு கிடைத்திருக்கிறது. ஐந்து மாத குழந்தைப் பாலுக்கு அழுகிறது என்றுத்தான் இந்த உலகம் சொல்லும், அது அம்மாவின் தோழுக்குத் தான்  அழுகிறது என்பதை யார் வந்து சொல்வார்கள்.நீயும் உன் நினைவுகளும் ஒன்று தான்,கொள்வீர்கள் ஆனால் சாகவிட மாட்டீர்கள்.எல்லாப் பொருள்களும் உன்னையே நினைவு படுத்துவதால் நினைவெல்லாம் நீ என்று ஆகி விட்டது எனக்கு. தற்கொலை முடிவுகள் கோழைத்தனம் என்றாலும் அதிலும் எனக்கு தோல்விதான்.உனக்குத் தெரிந்து நான் செய்த காதல் உன்னை மறக்க முடியாமல் செய்கிறது. உனக்குத் தெரியாமல் நான் செய்த காதல் தான் என்னை இயங்க விட முடியாமல் படுத்துகிறது. நான் நேசித்தப் பொருளை இன்னொருவர் உடைத்து விடுவார் எனத் தெரியாமல் இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறேன். இதை என்னவென்று சொல்வது. எல்லாம் முடிந்து ஒன்று மட்டும் தெளிவாய்த் தெரிகிறது,  நீ எனக்கு பிடித்த உலகமாய் இருந்திருக்கிறாய், நான் உனக்குப்  பிடித்த விளையாட்டாய் இருந்திருக்கிறேன். குட்டிமா உனக்கான எல்லாமே இன்னும் பாதுகாப்பாய்  இருக்கிறது என்னிடத்தில், தொலைத்து விட சொல்லி மந்திரித்தே விட்டாலும் முடியாது என்னால். வாழ்ந்த உலகம் இறந்த காலத்தில் இருக்கும் போது இருக்கிற காலத்தை நீ இல்லாமல் நான் எங்கேப் போய்த் தேடுவது. உனக்காக அலங்கரிக்கப் பட்ட கவிதைகள் இன்று தர்ம சங்கடத்தில் இருப்பதை யாராவது உன்னிடம் சொல்வார்களா!  உன் தோழிகளைப் பார்த்தால் நான் ஒளிந்து கொள்கிறேன்,  அவர்களைப் பார்த்தால் என் கண்ணீர் கூட காட்டிக்  கொடுத்து விடும் நீ என்னோடு இல்லை என்பதை. உனக்கு சாதகமான முடிவுகள் எல்லாம் எனக்கு பாதகமாய் மாறியதை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. உன்னை மன கோலத்தில் பார்த்த கனவுகள் எல்லாம் என் கண்ணைக் கொத்துகின்றன.என் கனவுகளின் ஏளனப்  பார்வையில் இருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை. குட்டிமா உன் நினைவுகளிடமிருந்து என்னால் தப்பி பிழைக்கவும் முடியவில்லை. நீ இல்லாமல் பிழைத்திருப்பது எனக்கு பிழைப்பில்லை என்றுத் தோன்றுகிறது. கடைசியில் நான் கொடுத்த எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விட்டாய் என்னை தவிர?  நீ இல்லாமல் என்னை தேடுவது அவ்வளவு சுலபமில்லை, இருந்தாலும் தேடிப் பார்க்கிறேன் எங்கே தொலைத்தாய் என்று. கிடைத்தால் சொல்லி அனுப்புகிறேன்,  இல்லையென்றால் யாரிடமாவது சொல்லி அனுப்புகிறேன் நான் தொலைந்தேப் போய்விட்டேன் என்று...

                                                                             இப்படிக்கு இழந்தவன்........

வெள்ளி, 9 மார்ச், 2012

சிரிப்பு மருந்தல்ல.... அது ஒரு மகிழ்ச்சி......

நான்கு மணி நேர ரயில் பயணத்தில் யாரும் சிரிப்பதாய் இல்லை.எல்லோரும் ஏதோ கடவு அட்டைக்கு புகைப் படம் எடுக்க வந்தவர்கள் போலவே இருக்கிறார்கள்.சென்னை வாசிகளும் மனிதர்கள் தான் என்பதை கழுத்தில் மாட்டி இருக்கும் அடையாள அட்டை மட்டுமே சொல்கிறது.பெயருக்கு ஒரு புண்முறுவல் கூட இல்லை.என் பக்கத்தில் இருந்த சகப் பயணியிடம் இதைப் பற்றி கேட்டேன்,அவருக்கு யார் மேல் என்ன கோபமோ அந்த கோபம் முழுவதையும் என் பக்கம் திருப்பி விட்டார்.இப்படியான கேள்விகள் எங்கள் ஊரில் இதுவரை யாரிடமும் நான் கேட்டதில்லை.பரம எதிரியான பாபு மாமா கூட எங்கேனும் பார்த்துவிட்டால் கொஞ்சமாய் சிரித்து விட்டு போவார்.அப்படியான மனிதரிடம் ஏன் என் குடும்பத்தார் பேசுவதில்லை என யோசித்து  கொண்டே வீடு வருவேன்.பிறகு தான் தெரிந்தது மாமா யாரைப் பார்த்தாலும் அப்படித் தான் சிரித்து வைப்பார் என்று.அப்படியான ஒரு மனிதரை கூட இது வரை நான் சென்னையில் சந்தித்தது இல்லை.பேருந்து நடத்துனரின் கோபப் பார்வைக்கு பயந்து ஒரு ரூபாய் மீதியை கேட்காமல் விட்ட சம்பவங்கள் இங்கு எனக்கு அதிகம்.அண்ணா சாப்பாட்டு பார்சலில் மோர் இல்லை என்றால்,கடைக்காரர் பார்க்கும் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவமும் எனக்கு உண்டு.ஒரு சிறிய புன்னகையில் எல்லாம் சரி ஆகி விடும் என்ற வார்த்தையை மதித்து,இங்கு கொஞ்சம் சிரித்துவிட்டால் அடிப்பதர்க்கே  ஆள்  வைத்திருக்கிறார்கள் சில நல்லவர்கள். கொஞ்சம் சிரித்தால் அப்படி எதை இழந்து விட போகிறார்கள் சென்னை வாசிகள்.ஒரு அடுக்கு மாடியில் குடியிருக்கும்  எனக்கு தெரிந்த மனிதருக்கு,அந்த கட்டிட  தாழ்தலத்தில்  நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தெரிந்த அளவுக்கு அந்த வாகனத்தின் உரிமையாளரை தெரியவில்லை என சொல்லும் போது  என் மக்கள் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை.முகபுத்தகத்தில் முகம் தெரியாத ஒருவரிடம் ஏமாந்து போன ஒரு பெண்ணின் கதையை சமீபத்தில் தொலைகாட்சியில் பார்க்க நேரிட்டது,தன் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள அந்த பெண்ணுக்கு அப்படியான யாரும் தன் பக்கத்து வீட்டில் இல்லையா? இல்லை அவளது வீட்டில் இல்லையா? முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு வழங்க படுகிற நேரத்தில் பாதி நேரம்  கூட நன்கு தெரிந்த, நம் வீட்டில் இருப்பவர்களுக்கு அந்த பெண்ணை போன்றவர்கள் வழங்காதது ஏன்? கொஞ்சம் யோசித்து பாருங்கள்,எல்லாத் தவறும் நம்மிடமும்,நம் சமூகத்திடமும் தான் இருக்கிறது.தினமும் பார்க்கின்ற முகம் தான் என நினைத்து சில நல்ல மனிதர்கள் அலட்சியப்படுத்துவதும்,பத்து நிமிடம் சிரித்து பேச நேரம் இல்லாததும் தான் அந்த பெண்ணை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. சிரிப்பதற்காக மட்டுமே சமுக வலைத்தளத்திற்கு வருகிறவர்கள் நம்மில் அனேகர்.நான் பார்த்திருக்கிறேன் சமுகத்தை பற்றியோ,நம் இனத்தை பற்றியோ பேசுவதற்கு இங்கு யாரும் வருவதில்லை.முக புத்தகத்தில் அரட்டை அடிப்பதற்கும்,வீணான கதைகள் பேசுவதற்கு மட்டுமே மிக அதிக பக்கங்கள் உள்ளன.அதில் தான் அதிக முகம் தெரியாத மக்களும் இருக்கின்றனர்.அப்படியான மக்கள் அங்கே சிரித்து பேச வருகிறார்கள் என்றால்,  அவர்களின் பக்கத்துவீட்டில் இருப்பவர்களோ,பக்கத்தில் இருப்பவர்களோ அவர்களோடு சேர்ந்து சிரித்துபேச தயாராய் இல்லை
என்று தானே பொருள்.இப்படியான வாழ்க்கை இன்று சாதாரணமாக தெரியலாம் ஆனால் நாளை? இது இப்படியே தொடருமானால்,நாளை உதவி செய்வது மனிதாபிமானம் என்பதைப் போல, சிரிப்பதும் மனிதாபிமானம் என்ற பட்டியலில் இடம் பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை."நாம் சோகமாய் இருந்தால் சிரிக்க முயற்சிப்போம்.பிறர் சோகமாய் இருந்தால் சிரிக்க வைக்க முயற்சிப்போம்." (நான் எழுத பழகுகிறேன்,பிழை இருந்தால் சிரித்துவிட்டு சொல்லுங்கள்.நான் திருத்திகொள்கிறேன்)

நமது இனம்......

செங்கொடியும் முத்து குமாரும் யாரென்று என் நண்பன் கேட்கிறான்.எப்படி சொல்வது நாமெல்லாம் நம்பி ஏமாந்த தமிழக அரசைப் போல, நம்மை எல்லாம் நம்பி ஏமாந்துப் போன தீப்பிழம்புகள் என்று....... நமது இனம்

வியாழன், 8 மார்ச், 2012

சாதனையாளர் தான்

நம்மை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் திரும்பி படுத்திருந்தவர்கள் தான்.முள் மீதும் கல் மீதும் விழுந்து காயப்படாதவன் பூக்களைப் பார்ப்பதற்கு கூட தகுதி இல்லாதவன்.உழைக்க உன்னால் முடியும் என்றால் பிழைக்க ஆயிரம் வழிகள்.நடக்கத் தெரியாதவன் தான் பாதையைப் பற்றி கவலை பட வேண்டும்.உனக்கென்ன நீ பறக்க தெரிந்தவன்!நீ பறக்க வேண்டியப் பாதையை ஊர் வந்தா சொல்லவேண்டும்.உன் பெயருக்காக எத்தனையோ பலகைகள் தயாராய் இருக்கின்றன.குடும்ப அட்டையில் மட்டும் இருக்க வேண்டிய பெயரா உனது.உண்பதும் உறங்குவதும் மட்டும் தான் உன் வேலை என்றால் வெட்கப் பட போகிறார்கள் உனக்கு பெயர் வைத்தவர்கள். உன்னை ஏதாவது ஒரு மேடையில் சந்திக்க காத்திருக்கிறார்கள் சாதனையாளர்கள்.புறப்பட்டு விட்டாய் என நினைக்கிறேன்.நீயும் சாதனையாளர் தான்

தேடல் இருக்கிறது இந்தப் பயணத்தில்.......

ஏதோ ஒரு கனவோடு சென்னைக்கு ரயிலேரும் ஒருவனின் பயணம் அவ்வளவு இனிமையானது அல்ல,லட்சியப் பயணம் தொடங்குவதே முன்ப்பதிவில்லாத ரெயிலின் கடைசிப் பெட்டியில் தான்.அவன் சென்னைக் கிளம்ப காரணமான ஏதாவது ஒரு கட்டுரையோ,யாரோ ஒரு சாதனையாளரின் வெற்றிக் கட்டுரையோ  அந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கும். எத்தகைய கனவுகளோடு சென்னை வந்து இறங்கினாலும், சென்னை வாசிகளின் ஒரு சின்ன ஏளனப் பார்வையில் கனவுகள் சட்டென்றுப் பட்டுப் போகும். ஆயிரம் தமிழ் சொந்தங்கள் இருந்தும் அனாதயாய்ப்போன ஒரு எண்ணம் சட்டென வந்து போவதை அவன்  உணர்ந்திருப்பான்.அவனின் செயலே அவனை அன்னியன் என்பதை காட்டிக் கொடுத்துவிடும்.அவன் வான ஊர்தியை  அண்ணாந்து பார்க்கும் போதே மெத்தப் படித்த மேதாவிகள் இவன் பட்டிக்காட்டான் என்பார்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம்.சென்னை வந்ததை ஏதோ பிரமிப்பாய் தன் நண்பனுக்கு ஒரு ரூபாய் தொலை பேசியில் சொல்வான்.அப்போது அவனுக்கு தெரியாது அந்த பிரமிப்பு அந்த ஒரு ரூபாய் நாணயத்தோடு முடிந்து விடும் என்று. இருப்பதற்கு ஒரு இடமும் உண்பதற்கு உணவும் ஊரில் இருந்து எடுத்து வராததால் அவனின் கண்கள் ஏதோ ஒரு தேடலிலேயே இருக்கும். நம்மால் முடியும் என நினைத்து வந்தவனை சென்னை முடிந்த அளவுக்குப் புரட்டிப் போடும்.அவன் விழுந்து எழுகின்ற இடங்களில் மட்டும் முட்களாய் இருக்கும்.அவனை தூக்கி நிறுத்த கால்கள் படாத பாடு படும் என்பதை அவன் பக்கத்தில் இருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.அப்போது தான் அவனுக்குப் புரியும் இது வரை வாழ்ந்தது வாழ்க்கை அல்ல இனி வாழ்வது தான் வாழ்க்கை என்று.எப்படியும் தின தந்தி அவனுக்கு தங்கும் வசதியுடன் ஒரு வேலையைப் பெற்று தந்து விடும்.கிடைத்த வேலையை செய்து பிடித்த வேலையை நினைத்து புலம்புவதை அவனின் சக நண்பர்கள் அடிக்கடி கேட்கலாம்.இரு சக்கர வாகனம் இவன் கனவில் மட்டுமே சொந்தமாக்கி இருந்ததால் இலகு ரக வாகனங்கள் அவனின் கண்ணுக்கு மட்டும் கனரக வாகனமாய்த் தெரியும்.கிடைத்த வேலை படுத்தி எடுக்கும்.பிடித்த வேலை இரவுகளில் தூக்கத்தை துரத்தி அடிக்கும். எப்படியும் ஒரு நாள் தானும் ஒரு பாரதிராஜாவாகனும் என்ற கனவு மட்டும் அவன் விழிப்பதற்கு ஒரு நொடிக்கு முன் வந்து விட்டு போகும்.அப்படியே வந்த தூக்கமும் அந்த கனவோடு போகும்.இப்படிப் பட்டவனை நீங்கள் பார்க்க எங்கும் தேடி போகவேண்டியதில்லை.உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கலாம்.பேருந்து பயணத்தில் உங்கள் பக்கத்து இருக்கையில் இருக்கலாம்.நீங்கள் காரில் போகும் போது நடந்துப் போய்கொண்டு இருக்கலாம்.நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம் கவனமாய்ப் பார்த்து செல்லுங்கள்.ஏனெனில் அவன் ஏதோ ஒரு கனவில் நடந்து கொண்டிருப்பான்.

செவ்வாய், 6 மார்ச், 2012

குழந்தை இல்லாதவள்......

       குழந்தை இல்லாதவள்......

  
   பெற்றெடுத்த மகனுக்கோ
   மகளுக்கோ வைக்கப்
   படவேண்டியது பெயர்!
                     
    நான் பெற்றேடுக்காததால்
    எனக்கு வைக்கப் படுகிறது
    மலடி என்று.......

   கோவில் கர்ப்ப கிரகங்களில்
   பாலாபிஷேகம்  செய்கிறேன்...
   என்றாவது என் கோவில்
   கும்பாபிஷேகம்  காணும் என்று......

   புழு பூச்சி வைத்தால் கூட
   பிள்ளை என நினைத்து
   வளர்த்து விடலாம்.....
   அதற்கும் நான்
   புதைக்கப் பட வேண்டும் போல......

வியாழன், 1 மார்ச், 2012

வாழ்ந்த காலம் அது மட்டும் தான்......


கடுகளவு  இதயத்தில்
மலை அளவிற்கு உன் காதலை
சுமந்து சுமையாய்  இருக்கிறேன்..

எழுது கோல் கொண்டு எழுதினால்
உணர்வோட்டம் இருக்காது
என்ற பயத்தில் தான்
உயிர் காக்கும் என்
உதிரம் கொண்டு எழுதுகிறேன்....

என் வாழ்க்கை இப்படித் தான்
இருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்...
எப்படி வேண்டுமானாலும்
இருக்கட்டும் என நீ  நினைக்கிறாய்...

உன்னோடு வாழ்ந்த காலம்
இறந்த காலமாய் இருந்தாலும்
உண்மையில் நான்
வாழ்ந்த காலம் அது மட்டும் தான்.......  

யாரிடம் சொல்லி அழுவதென்று
தெரியவில்லை.....
எல்லோரிடமும் சொல்லி
தொலைத்து விட்டேன் நீ தான்
என் வாழ்க்கை என்று.....

என்னை விட்டு போன
அந்த நாளை  நீ மறந்து விடலாம்....
இன்னும் அந்த நாளிலேயே
இருக்கிற நான் எப்படி மறப்பது......

விடிய விடிய விழித்து
கொண்டு இருக்கலாம்
எப்படி அழுது கொண்டு இருப்பது....... 



தேவதைகளிடம் கேட்டு பாருங்கள்
ஒன்று சொல்லி விட்டு போவர்கள்!
இல்லையேல் செய்து
காட்டி விட்டு போவார்கள்....! 



தெருவெல்லாம் தேவதைகளாய் இருப்பார்கள்
!விசாரித்து பாருங்கள்.....
அவர்களில் பாதி பேர் பெயருக்குத்தான்
தேவதைகளாய் இருப்பார்கள்..... 



தேவதைகளுக்கு சொந்தமாய்
ஒரு மொழி இருக்கும் ....
கேட்டு பாருங்கள் அதில் ஒன்றுக்கு
ஆயிரம் அர்த்தம் இருக்கும்..... 



அர்த்தம் தேடுவதே நமக்கு
ஒரே வேலையாய் இருக்கும்..... 



தேவதைகள் ஒன்று மாறி போவார்கள்..!



இல்லையேல் யாராவது
ஒருவரை மாற்றி போவார்கள்.......!

எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து.....


மேரி கெல்வின்.

மேரி கெல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கிவிட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக்குரல் கேட்கிறதோ ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிக்கையாளர் மேரி கெல்வின் கடந்த 23 ஆம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்.

"2001ஆம் ஆண்டு வன்னியில் 5 லட்சம் தமிழரின் அவல நிலையை அறிந்து கொள்ள புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் நான் நுழைந்தேன். அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்து இருந்தது. ஸ்ரீலங்கா படைகளின் கண்ணில் படாமல் வெளியேறி விட வேண்டுமென்று நான் நினைத்தேன். சிறு விளக்குகளின் ஒளி, முட்கம்பி வேலிகள், இடுப்பளவு தண்ணீர் ஊடான காட்டுப் பாதையில் நான் பயணித்தேன். ஆனாலும், படையின் கண்ணில் பட்டேன். என்னை பார்த்ததும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். வெளிச்ச குண்டுகளை வீசினர். நான் பத்திரிக்கையாளர் என்று கத்தினேன்.அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது, கிரனைட் வைத்து தாக்கினார்கள்.அந்த ரத்த காயத்துடன் முன்னே நடந்து வந்தேன்.நிற்க முடியவில்லை.ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது.அப்போது என் எதிரில் வந்த படையினர் பலமாகத் தாக்க தொடங்கினார்கள்.என் உடைகளை கிழித்து நிர்வாணம் ஆக்கினார்கள்.நான் மூச்சு விடக் கஷ்டப்பட்டு கொண்டும்,தலையில் கண்ணில் காயத்துடனும் நெஞ்சில் வெடி காயத்துடனும் இருந்தேன்.அப்படியே தூக்கி கனரக வாகனத்தில் வீசினார்கள்.அந்த மக்கள் பட்ட கஷ்டத்தை விட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை என்றாலும் எனது அனுபவம் தமிழர்களின் வேதனையை சொல்ல போதுமானது" என்று,உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தவர் மேரி கெல்வின்.

எங்கோ பிறந்து யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கெல்வின் வாழ்க்கை,நம் அனைவருக்குமான தூண்டுதல். 

நன்றி ஜூனியர் விகடன் 04 /03 /2012

என்னைப் பற்றி

எனது படம்
நான் இணையதளத்தில் போராளி ஆக வேண்டும் என்ற ஆசையில் உருவானது இந்த மின் பக்கம். எதையோ சொல்ல வந்து எது எதையோ சொல்லுவேன், ஆமா இது தான் என் வேலை. உங்களுக்கு பிடிக்காதது மட்டும் தான் இங்க இருக்கும். புதிதாக இருக்கிறதே என்று எதையும் ஆவலாக தேடாதீர்கள். ஏமாற்றங்களுக்கு இந்த தளமோ பதிவரோ பொறுப்பல்ல.... (குறிப்பு) சட்டதிட்டத்திற்கு புறம்பானது.